
ராயபுரம்:
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி சென்னை மூல கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் தி.மு.க. மாநில மாணவரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான எழிலரசன் தலைமையில் தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதில் கலாநிதி வீராசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆர்.டி.சேகர், கே.எஸ்.ரவிசந்திரன், மாநில பிரச்சார குழு தலைவர் சிம்லா முத்துச்சோழன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஏ.டி.மணி, பகுதி செயலாளர்கள் செந்தில், சுரேஷ். பகுதி நிர்வாகிகள் அருளரசன், கோவிந்தசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
இதேபோல் மொழிப் போர் தியாகிகள் நினைவிடத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘இந்தி தற்போது முன்பை விட 100 சதவிகிதம் அதிகமாக மோடி அரசால் திணிக்கப்படுகிறது, இந்தி காரர்களுக்கு மட் டுமே வேலை வாய்ப்பு வழங் கப்படுகிறது. எங்கு சென்றா லும் இந்தி திணிப்பை முன் வைக்கிறார்கள். இந்த நேரத்தில் இந்தியை திணித்தால் அதை எதிர்ப்போம் என்று அனைவரும் உறுதிமொழி கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்களும் போராடுவோம்’ என்றார்.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தி எதிர்ப்புக்கு எதிராக போராடி உயிர் நீத்த போராளிகளுக்கு என்னுடைய வீரவணக்கம். மத்தியில் ஆட்சி மாறினாலும் இந்தி திணிப்பு நீடிக்கிறது.
பாராளுமன்ற செயலகத்தில் அனைத்துகோப்புகளும் இந்தியில் தான் இருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பக்கூடிய சுற்றறிக்கையில் கூட இந்தி இருக்கிறது.
இந்தி திணிப்புக்காக கோடிக்கணக்கில் மோடி அரசு நிதி ஒதுக்குகிறது. இந்து நாடாக உருவாக்குவதில் தொடர்ந்து மோடி அரசு முயற்சி செய்து வருகிறது.
விவசாயிகளின் நலனை பாதிக்கும் வகையில் வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 50 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 70 பேர் மரணம் அடைந்து உள்ளனர்.
ஆனால் மத்திய அரசு பின் வாங்குவதாக இல்லை. நாளை நடைபெறுகின்ற டிராக்டர் ஊர்வலத்தை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வருகிறது. நாளை ஒரு துப்பாக்கி குண்டு சத்தம் முழங்கினால் கூட உலக அளவில் பா.ஜ.க. வெட்கி தலைகுனிய நேரிடும். நான்கு தலை நகரம் என்பது வரவேற்கத்தக்கது.
நாளை டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் ஊர்வலத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழகத்தில் தி.மு.க. டிராக்டர் பேரணி போராட்டம் நடத்துகிறது.
இதனை தனிப்பட்ட முறையில் தி.மு.க. நடத்துகிறது என்று நான் கருதுகிறேன். ஒருங்கிணைய வேண்டிய நேரத்திலும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு கட்சிக்குமான செயல் திட்டம் செயல்படுத்தப்படும் போது அது தனி அமைப்பாகவே, தனி இயக்கமாக, தனி போராட்டமாகவே இயங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.