மதபோதகர் பால் தினகரன் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தினார்கள்.
தற்போது வருமான வரி சோதனை நிறைவடைந்த நிலையில் அங்கு ரூ.120 கோடி அளவுக்கு கணக்கில் வராத முதலீடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முதலீடுகள் பெரும்பாலும் வெளிநாட்டு முதலீடுகள் ஆகும்.
மத பிரசார கூட்டத்துக்கு வரும் வருவாய் கணக்கில் காட்டப்படாமல் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் பெறப்பட்ட நிதியை இங்கு கணக்கில் காட்டாமல் வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ரூ.120 கோடி அளவுக்கு கணக்கில் வராத முதலீடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பால் தினகரனை விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். அவர் அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.