
அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியதாவது:-
ஜெயலலிதா இல்லாத நிலையில் அ.திமு.க. என்றால் சசிகலாதான் என்பதை சிறுபிள்ளை கூட சொல்லும்.
அ.தி.மு.க. என்ற பேரியக்கத்துக்கு சசிகலாவின் பங்களிப்பு எப்படிப்பட்டது என்பதை தொண்டர்கள் அறிவார்கள். எந்த பதவியையும் எதிர்பாராமல் ஜெயலலிதாவுடன் இருந்து கஷ்டம், நஷ்டம், வெற்றி, தோல்வி என்று எல்லாவற்றிலும் பங்கெடுத்து தன்னையே தியாகம் செய்தவர்.
இன்று பதவியில் இருக்கும் சிலர் நன்றி மறந்து பேசலாம் அவர்களில் 90 சதவீதம் பேர் சசிகலாவால் பதவி பெற்றவர்கள்.
ஓ.பி.எஸ். முதல்வர் பதவி வகித்ததும் சசிகலா, தினகரனின் சிபாரிசால்தான். இன்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருப்பதும் அவர்களால்தான். எம்.எல். ஏ.க்களால் பதவிக்கு வந்ததாக கூறுகிறார். அந்த எம்.எல்.ஏ.க்களை சம்மதித்து ஓட்டு போட வைத்தது யார்? தான் ஜெயிலுக்கு போக வேண்டிய சூழ்நிலை வந்தபோதும் கட்சியை விட்டு விடாமல் அனைவரையும் ஒருங்கிணைத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ள வைத்தார். அந்த உண்மைகளை மறந்தாலும் மறைத்து விட முடியாது.
இன்னும் ஒரு வாரத்தில் சசிகலா விடுதலையாகி வருவார். அவர் வந்ததும் அ.தி.மு.க. அவர் வசமாகும். தொண்டர்கள் அனைவரும் அவர் பக்கம் வருவார்கள். ஒரு இயக்கத்தின் தலைமை யார் என்பதைதான் பொதுமக்கள் பார்ப்பார்கள். அந்த தலைமைக்கு பக்க பலமாக இருப்பது தொண்டர்கள். அ.தி.மு.க.வை நேசிக்கும் ஒவ்வொரு தொண்டனும் இந்த இயக்கத்துக்கு சிறு சேதாரம் கூட வராமல் பாதுகாத்து வைத்த சசிகலாவையும், தினகரனையும் நேசிப்பார்கள்.
அவர் வெளியே வந்ததும் அதிரடியான முடிவுகளை நிச்சயம் அறிவிப்பார். தேர்தலை சந்திப்பது, கூட்டணி போன்ற எல்லாவற்றுக்கும் அவர் வந்ததும் பதில் கிடைத்து விடும்.
இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிதான் ஜெயித்தது வரலாறு. ஆனால் 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் எதிர்க்கட்சி வென்றது. பாராளுமன்ற தேர்தலிலும் ஒரே ஒரு தொகுதியில்தான் வென்றார்கள். இதன் மூலம் இவர்களின் செல்வாக்கு தெரிந்து விட்டது.
இரட்டை இலை சின்னம் இருந்தும் கூட வெற்றி பெற முடியாததன் மூலம் இவர்கள் தலைமையை மக்கள் ஏற்கவில்லை என்பது தெரிந்து விட்டது.
பதவிக்காக இன்று சிலர் எதையாவது பேசலாம். ஆனால் நன்றி உணர்வு அவர்கள் மனதை நிச்சயம் உறுத்தும். அதனால்தான் பலர் வெளிப்படையாகவே ஆதரிக்க தொங்கி இருக்கிறார்கள்.
நாட்கள் நெருங்க நெருங்க இன்னும் சூழ்நிலைகள் மாறும். எல்லோருமே சசிகலா, தினகரன் ஆதரவாளர்களாகி விடுவார்கள்.
விரைவில் அ.தி.மு.க. சசிகலா வசமாகும். அதற்கான நாள் வெகுதொலைவில் இல்லை.
இவ்வாறு சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.