
சேலம் அம்மாப்பேட்டையில் நாடக பேராசிரியர் சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய வள்ளி திருமணம் புராண நாடகம் நடந்தது. இந்த நாடகத்தில் வள்ளியின் தந்தை நம்பிராஜன் கதாபாத்திரத்தில் சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்க பொருளாளரும், சேலம் தெற்கு எம்.எல்.ஏ.வுமான ஏ.பி. சக்திவேல் நடித்தார். இதில் சிறப்பாக நடித்த அவரை கை தட்டி ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்தினர். மேலும் இதில் நாடக நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரும் நடித்தனர்.
இது குறித்து ஏ.பி. சக்திவேல் எம்.எல்.ஏ. கூறியதாவது:- சிறு வயது முதலே நாடகங்களில் நடிப்பதை ஆர்வமாக கொண்ட நான் இதுவரை 150-க்கும் மேற்பட்ட மேடைகளில் நடித்துள்ளேன். சித்திர வள்ளி நாடகத்தில் டெல்லி பாதுஷா வேடத்திலும், வீர அபிமண்யு நாடகத்தில் பீமசேனன் வேடத்திலும், கர்ணனும், கண்ணனும் நாடகத்திலும் மற்றும் சமூக நாடகங்களிலும், சிவபெருமாள் வேடம் உள்பட பல்வேறு முக்கிய வேடங்களில் நடித்துள்ளேன்.
சங்கரதாஸ் சுவாமிகள் குரு பூஜை நாளை உலக நாடக தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் நாடக நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு 2 ஆயிரமாக வழங்கப்படும் உதவி தொகையை 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும், அனைவருக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி செய்து தர வேண்டும், பஸ்பாஸ் வழங்க வேண்டும், சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த இடமான தூத்துக்குடி மாவட்டத்தில் அவருக்கு வெண்கல சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.