
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர்ராஜூ நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதற்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக ஏதேதோ சொல்கிறார். அ.தி.மு.க. நல்லாட்சி வழங்கியதால் தான் 1977-ல் இருந்து 10 முறை தேர்தலை சந்தித்து அதில் 7 முறை வெற்றி பெற்றுள்ளது. நல்லாட்சி வழங்கியதால் தான் மக்கள் ஆட்சிக்கு கொண்டு வரு கின்றனர்.
நடைபெற உள்ள தேர்தல் கமல்ஹாசனுக்கு தக்க பாடத்தை புகட்டி அரசியலுக்கு லாயக்கில்லை என மக்களால் விரட்டப் படக்கூடிய தேர்தலாக அமையும்.
இவரை மக்கள் விரும்பி அரசியலுக்கு அழைத்தனரா? அரசியல் கட்சி தொடங்கியதற்கு ஒரு சாக்குப்போக்கு சொல்ல வேண்டும். இந்த தேர்தல் கமல்ஹாசனுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்.
கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் இயங்காமல் இருந்த போது எந்த வரியும் விதிக்கப்படவில்லை. கேளிக்கை வரியை ரத்து செய்வது குறித்த தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கை, முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் நல்ல முடிவை அறிவிப்பார்.
பொங்கல் பண்டியையையொட்டி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முறைப்படுத்தப்பட்ட கட்டணம் தான் வாங்க வேண்டும் என்பது அரசின் விதி. அதை மீறி நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
பண்டிகை காலங்களில் பஸ்களில் தட்கல் முறையில் டிக்கெட் வழங்குவது போல தமிழகத்தில் தியேட்டர்களில் தட்கல் டிக்கெட் வழங்கும் முறையை செயல்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சரின் ஆலோசனையின் பேரில் நான், வணிகவரித்துறை அமைச்சர், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் 3 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம்.
தட்கல் டிக்கெட் எவ்வளவு நிர்ணயம் செய்யலாம் என தியேட்டர் உரிமையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திடமும் கேட்டுள்ளோம். இந்த திட்டம் பரிசீலனையில் உள்ளது. கூடிய விரைவில் தியேட்டர்களுக்கான தட்கல் டிக்கெட் முறை அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.