
நாகரீக பெண்களில் சிலர் இன்று நாம் என்ன செய்கிறோம்? என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து தான் செயல்படுகிறார்களா? என்கிற சந்தேகத்தை பலமாக எழுப்பும் வகையில் சென்னை இளம்பெண்ணின் செயல் அமைந்துள்ளது.
அதற்கு இன்று பல்கி பெருகிவிட்ட யூடியூப் சேனலும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதையடுத்து போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அப்படி என்ன நடந்தது? இளம்பெண் அப்படி என்ன பேசினார்? என்பதை வீடியோவில் பார்த்தால் தலை சுற்றுகிறது.
புத்தாண்டையொட்டி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ‘சென்னை டாக்’ என்கிற யூடியூப் சேனல் சார்பில் பெண்களிடம் பேட்டி எடுத்து ஒளிபரப்பி உள்ளனர். அப்போது நாகரீக இளம்பெண் ஒருவரிடம் ‘மைக்’கை நீட்டியதும் அவர் அந்தரங்க விஷயங்களைத்தான் தாம் பேசுகிறோம் என்பது தெரியாமல் சிரிக்க... சிரிக்க... பேசுகிறார்.
நீங்கள் எப்படி ஒரே நேரத்தில் 3 பெண்களை சைட் அடிக்கிறீர்களோ? அதுபோன்று என்னாலும் முடியும் என்று பேச தொடங்கும் அந்த பெண்ணின் வீடியோ, சுமார் 3 நிமிடங்களை கொண்டதாக உள்ளது.
இதன் பின்னர் அவர் பேசும் எந்த வார்த்தைகளையும் அச்சில் ஏற்ற முடியாது. அந்த அளவுக்கு அருவறுக்கத்தக்க வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது. உன்னை பேட்டி எடுப்பது ஒரு இளைஞர் என்கிற கூச்சமும் இன்றி ஆபாச வார்த்தைகளை அந்த பெண் அள்ளி வீசுகிறார். ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது எல்லாம் பழைய காலம் என்றும் கூறி அந்த பெண் அதிர வைக்கிறார்.
இதனை பார்க்கும் போது அந்த பெண்ணின் வெட்கமும், நாணமும் எங்கே போனது என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
இப்படி பெண் என்றும் பாராமல் ஆபாசமாக பேட்டி எடுத்த யூடியூப் சேனல் நிறுவனம், அந்த பேட்டியை அப்படியே வெளியிட்டு கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் இளம்பெண் ஆபாசமாக பேசிய வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. பலரும் வீடியோவை பார்த்து முகம் சுளித்தனர். பெண்கள் பலர், ஆபாசமாக அத்துமீறும் வகையில் பேட்டி எடுத்து ஒளிபரப்பிய யூடியூப் சேனல் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக லட்சுமி என்பவர் சாஸ்திரிநகர் போலீசில் புகார் அளித்தார்.
இதுபற்றி சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அடையாறு துணை கமிஷனர் விக்ரமன், அறிவுறுத்தலின் பேரில் சாஸ்திரிநகர் போலீசார் யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து யூடியூப் சேனல் நிர்வாகியான தினேஷ்குமார் இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த அசன் பாட்ஷா, கேமிராமேன் அஜய்பாபு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் பாய்ந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்ணிடம் ஆபாசமாக பேசியது ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று யூடியூப் சேனல்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. அதை நடத்துபவர்கள் ஏடாகூடமாக கேள்விகளை கேட்டு இதுபோன்று பல பெண்களின் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர்.