
தேனி:
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து சென்னையைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் மகன் உதித் சூர்யா தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார். இந்த முறைகேடு வெளி வந்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்குகளில் மாணவர்களுக்கு பதிலாக போலி நபர்களை வைத்து தேர்வு எழுத வைத்தது ஒரு இடைத்தரகர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக தேடி வந்தனர். கேரள மாநிலம் மணப்புரம் மாவட்டம் உன்னிய பண்டேபுரக்கால் பகுதியைச் சேர்ந்த ரசீத் (வயது 45) என்ற இடைத்தரகர் தேனி கோர்ட்டில் சரணடைந்தார்.
இதனால் இந்த வழக்கில் மீண்டும் விறுவிறுப்பு அடைந்தது. அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பெரியகுளம் சிறையில் அடைக்கப்பட்டார்.
ரசீத்திடம் விசாரணை நடத்தினால்தான் இந்த வழக்கில் ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி? வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபர்கள் யார்? என்ற விபரம் தெரிய வரும் என்பதால் அவரை 7 நாள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அவரை 3 நாள் காவிலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
வருகிற 11-ந் தேதி மாலை 4 மணிக்கு மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ரசீத் சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரை விசாரணைக்காக மதுரை அழைத்து செல்ல சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.