
புதுடெல்லி:
விவசாயிகள் மேம்பாட்டுக்காக மத்திய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இந்த வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், எனவே அவற்றை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லி புறநகரில் தங்கி இருந்து முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும் 41 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே 7 சுற்று பேச்சுவார்த்தைகளில் ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில் நேற்று 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இரு தரப்பினரும் தங்களது முடிவில் உறுதியாக இருப்பதால் எந்த சுமூக தீர்வும் ஏற்படவில்லை. விவசாய பிரதிநிதிகள் எந்தவித மாற்று கோரிக்கையும் வைக்காததால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும், மத்திய அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. என்றாலும் மீண்டும் வருகிற 15-ந் தேதி 9-வது முறையாக சந்தித்துப் பேச இரு தரப்பினரும் முடிவு செய்தனர்.
மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் அடுத்தக்கட்டமாக எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்று விவசாயிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இன்று (சனிக்கிழமை) அவர்களது முற்றுகைப் போராட்டம் 45-வது நாளாக நீடித்தது.
நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 41 விவசாய சங்க பிரதிநிதிகளும் டெல்லி புறநகரில் சந்தித்து பேச உள்ளனர். அப்போது போராட்டத்தை தீவிரப்படுத்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தபோது, சில கருத்து பரிமாற்றங்கள் நடந்தன. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதை கைவிட்டு விட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்து தீர்வு பெறலாமே என்று விவசாயிகளிடம் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டு இந்த விஷயத்தில் எத்தகைய தீர்ப்பு வழங்கினாலும் ஏற்றுக் கொள்ளத்தயார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் விவசாயிகள் மத்திய அரசின் இந்த யோசனையை ஏற்க மறுத்து நிராகரித்தனர். எங்களது போராட்டம் எத்தனை நாட்கள் ஆனாலும் தொடரும் என்று அறிவித்தனர்.
இது குறித்து விவசாய சங்க தலைவர் ஒருவர் கூறுகையில், “மத்திய அரசு மிவும் சாதுரியமாக எங்கள் போராட்டத்தை திசை திருப்ப நினைக்கிறது. அந்த திட்டம் நிறைவேறாது. வருகிற ஏப்ரல் மாதம் விவசாயிகள் பண்டிகை வர உள்ளது. இந்த ஆண்டு அந்த பண்டிகையை டெல்லியில்தான் கொண்டாடுவோம் என்று நினைக்கிறேன்” என்றார்.
இதனால் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என்று தெரிகிறது. இதற்கிடையே நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. அப்போது புதிய அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.