
மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா மாவட்டத்தில் 4 மாடிகளைகொண்ட அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளும், பிறக்கும் போதே குறைபாடு உள்ள குழந்தைகளும் சிகிச்சை பெறுவதற்காக சிறப்பு சிகிச்சை பிரிவு உள்ளது.
இந்த வார்டில் 17 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் பிறந்து ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வரையிலான குழந்தைகள் ஆவர். அவர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. குழந்தைகள் வார்டில் இருந்து புகை வருவதைக்கண்ட நர்சு ஒருவர் உடனடியாக அங்குள்ள டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் தீயை அணைத்து குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அதற்குள் ஆஸ்பத்திரியில் தீ அதிகமாக பரவியது. புகை மூட்டமும் அதிகமாக காணப்பட்டது.
தீயணைப்பு படையினர் தீயை அணைத்து வார்டில் சிகிச்சை பெற்ற பச்சிளம் குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் குழந்தைகளை உடனடியாக மீட்க முடியவில்லை.
இந்த தீவிபத்தில் எழும்பிய புகையால் மூச்சுத்திணறி வார்டில் சிகிச்சை பெற்ற 10 குழந்தைகள் பரிதாபமாக இறந்தன. அங்கிருந்து 7 குழந்தைகள் காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையின் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டனர்.
இந்த குழந்தைகள் அனைத்துமே ஆக்ஸிஜன் உதவியுடன் பராமரிக்கப்பட்டு வந்தன. மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் அந்த குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அவர்களுக்கு வேறு வார்டில் தற்போது ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிபத்து சம்பவம் தொடர்பாக மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரமோத் காண்டேட் கூறுகையில், ‘‘தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தீவிபத்து நடந்ததும் உடனடியாக 7 குழந்தைகளை மட்டுமே மீட்க முடிந்தது. தீவிபத்து பற்றி தகவல் கிடைத்த 5 நிமிடங்களில் ஊழியர்கள் குழந்தைகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தீவிபத்தை தொடர்ந்து மீட்கப்பட்ட 7 குழந்தைகளும், மற்ற வார்டுகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். குழந்தைகள் இறந்தது தொடர்பாக அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
மருத்துவமனையில் 10 குழந்தைகள் இறந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மகாராஷ்டிரா மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, உடனடியாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் டோபேயுடன் தொடர்பு கொண்டு பேசினார்.
பின்னர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் பேசினார். பின்னர் தீவிபத்து தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.
தீவிபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் டோபே அறிவித்துள்ளார்.
ஆஸ்பத்திரி தீவிபத்தில் 10 குழந்தைகள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநில மருத்துவமனையில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘‘மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் பச்சிளம் குழந்தைகள் இறந்திருப்பது வேதனை அளிக்கிறது. தீ விபத்தில் விலைமதிப்பற்ற இளம் உயிர்களை இழந்து விட்டோம். தீவிபத்தில் குழந்தைகளை பறிகொடுத்து துயரத்துடன் இருக்கும் பெற்றோர்களை நினைத்து வேதனை அடைகிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைவார்கள் என்று நம்புகிறேன்.’ என்று கூறி உள்ளார்.
மத்திய மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘‘ஆஸ்பத்திரியில் குழந்தைகள் இறந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மகாராஷ்டிரா அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்து மிகவும் துயரமானது. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
காயம் அடைந்த மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மகாராஷ்டிரா அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ‘ஆஸ்பத்திரியில் குழந்தைகள் இறந்தது மிகவும் வேதனையான சம்பவம். இதுதொடர்பாக அரசு முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
ஆஸ்பத்திரி தீவிபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் கதறித் துடித்தனர். ஆஸ்பத்திரியின் கவனக்குறைவே 10 குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
தீவிபத்தில் குழந்தையை பறிகொடுத்த ஹீராலால் என்பவர் கூறுகையில், ‘மருத்துவமனை ஊழியர்களின் கவனகுறைவாலேயே தீவிபத்து நடந்துள்ளது. மருத்துவமனை முறையாக செயல்படாததால் எனது குழந்தையை இழந்துள்ளேன். குழந்தை இறந்தது தொடர்பாக தாமதமாகவே எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்’ என்றார்.