திருவனந்தபுரம்:
கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் கடந்த மாதம் 31-ந்தேதி நடந்தது. இதில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் கேரள சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
கவர்னர் ஆரிப் முகமதுகான் உரையுடன் சட்டசபை தொடங்கியது. கவர்னர் உரை நிகழ்த்தியபோது காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர். கவர்னர் உரை முடிந்த பின்பு, மறைந்த சட்டசபை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கேரள நிதி மந்திரி தாமஸ் ஐசக் வருகிற வருகிற 15-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.