
தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி ஒரு அணியாகவும், தி.மு.க. கூட்டணி இன்னொரு அணியாகவும் போட்டியிடுகின்றன.
கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் முன் நிறுத்தப்பட்டிருந்தார்.
தேர்தலுக்கு பின்னர் இந்த கூட்டணி நீடிக்கவில்லை. இதையடுத்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து விஜயகாந்த் களம் கண்டார். இந்த கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில்தான் வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திக்க தே.மு.தி.க. தயாராகி வருகிறது.
இதுவரை 3 சட்டமன்ற தேர்தல்களை தே.மு.தி.க. சந்தித்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. கணிசமான ஓட்டுகளை பெற்றது. இதன் பின்னர் 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டி பிடித்தது. இப்படி 2 தேர்தல்களில் சாதித்து காட்டிய தே.மு.தி.க.வுக்கு 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல்தான் சறுக்கலை ஏற்படுத்தியது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. மீண்டு எழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விஜயகாந்தும், பிரேமலதா விஜயகாந்தும் காய் நகர்த்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக விஜயகாந்த் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. அந்த கூட்டணியிலேயே நீடித்து தேர்தலை எதிர்கொள்ள போகிறதா? இல்லை அணி மாறப் போகிறதா? தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதா? என்பது தெரியவில்லை.
இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள பிரேமலதா, தற்போது அ.தி.மு.க. கூட்டணியில்தான் நீடிக்கிறோம். சட்டமன்ற தேர்தல் கூட்டணி பற்றி விஜயகாந்த் அறிவிப்பார் என்று தொடர்ந்து பதில் அளித்து வந்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக தே.மு.தி.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை விரைவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு இந்த மாத இறுதியிலோ, அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ, பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, “இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்கிற கட்டாயத்தில் தே.மு.தி.க. உள்ளது. அதற்கேற்ப கட்சி தலைமை எடுக்கும்” என நம்புவதாக தெரிவித்தார்.