
பெங்களூரு:
நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் தவிர மற்ற வணிக நிறுவனங்கள், கடைகள், அந்தந்த மாநிலங்களில் மூடப்பட்டு இருந்தது. இதனால் மாநிலங்களுக்குள் பொருளாதார வீழ்ச்சியடை தொடங்கியது.
இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் படிபடியாக ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்திலும் கடந்த மே மாதம் ஊரடங்கில் இருந்து படிபடியாக பல்வேறு தளர்வுகளை அந்த மாநில முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் வழிகாட்டு நெறிகள்படி 8,9,10 மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதற்கிடையே கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக கோவிக்ஷின் தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 3 கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு அந்த தடுப்பூசி மருந்து நேற்று நாடு முழுவதும் போடுவதற்கு ஒத்திகை நடந்தது.
இதைத்தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்க அந்த மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவில் 10 பணியாளர்களுக்கு மேல் கொண்ட கடைகள், ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. பெண் ஊழியர்களை இரவு 8 மணிக்கு மேல் பணி செய்ய அனுமதிக்கக்கூடாது. ஒரு ஊழியருக்கு 8 மணி நேரம் மட்டும் பணி, கூடுதலாக 2 மணி நேரம் பணி வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை வேலைவாய்ப்பை உருவாக்குவதையும், பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது என கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.