
சென்னை:
மெரினா கடற்கரைக்கு செல்ல கடந்த மாதம் அனுமதி அளிக்கப்பட்டது.
சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பிய பிறகும் மெரினா கடற்கரை மட்டும் திறக்கப்படாமலேயே இருந்தது. கடற்கரையில் பொதுமக்களை அனுமதித்தால் கொரோனா பரவல் அதிகரித்து விடும் என்கிற அச்சத்தாலேயே தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி மறுத்து வந்தனர்.
இந்தநிலையில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் வேறு வழியின்றியே மெரினா கடற்கரையை திறக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.
மெரினா கடற்கரையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொது மக்கள் கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.
இன்று காலையில் மெரினா கடற்கரைக்கு முககவசம் இன்றி வந்த அனைவரையும் மாநகராட்சி அதிகாரிகள் மடக்கினர். அவர்கள் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.
மெரினாவுக்கு வாகனங்களில் வந்தவர்கள், நடை பயிற்சிக்காக சென்றவர்கள் என அனைவரிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘மெரினா கடற்கரை மட்டுமின்றி பொது மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்றும்,
கொரோனா வழி காட்டு நெறிமுறைகளான முககவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகிறோம்’ என்றும் தெரிவித்தார்.
பொதுமக்கள் மத்தியில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைந்து இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர். அலுவலகங்களுக்கு செல்பவர்கள் தவிர வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் முககவசம் அணிவதையே மறந்து போய் விட்டனர்.
கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வர வில்லை. எப்போது வேண்டு மானாலும் வைரஸ் தொற்று ஏற்படலாம் என்கிற விழிப்புணர்வுடன் பொதுமக்கள் செயல்பட வேண்டும். அப்போதுதான் கொரோனா பிடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.