
சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதி இந்த ஓட்டலில் உள்ள ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் மூலம் அங்கிருந்த ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் கொரோனா பரவத் தொடங்கியது.
உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். அப்போது கொரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையொட்டி ஓட்டல் நிர்வாகம் அங்குள்ள ஒவ்வொருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் ஓட்டல் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 609 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 85 பேர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 24 பேர் கிண்டி கிங்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மற்றவர்கள் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதில் பலருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்ததால், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
லேசான பாதிப்பு ஏற்பட்டவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு ஓட்டல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்றும் ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் 12 பேர்களுக்கு கொரோனா பரவியது கண்டறியப்பட்டது.
அவர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே ஓட்டலில் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மற்ற ஓட்டல்களிலும் கொரோனா பரிசோதனை நடத்த மாநகராட்சி முடிவு செய்தது.
அதன்படி நேற்று சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர சொகுசு ஓட்டல்களிலும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த பரிசோதனையில் எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலிலும் பலருக்கு கொரோனா பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்குள்ள 130 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 16 பேர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நட்சத்திர ஓட்டல்களில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா தொற்று வேகமாக பரவி வருவது மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓட்டல்களில் வருகிற 10-ந்தேதி வரை நிகழ்ச்சிகளை நடத்த சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.
மேலும் அனைத்து நட்சத்திர ஓட்டல்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் என்றும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு ஓட்டல்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் திவ்யதர்ஷினி கூறியதாவது:-
கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா, எம்.ஆர்.சி. நகர் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நட்சத்திர சொகுசு ஓட்டல்களிலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் என அறிவுறுத்தி உள்ளோம்.
அதன் அடிப்படையில் நேற்றும், இன்றும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. 25-க்கும் மேற்பட்ட சொகுசு ஓட்டல்களில் இன்று பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
அனைத்து ஓட்டல்களிலும் சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி வைத்திருந்து, அதனை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஓட்டல் மண்டபங்களில் 1,000பேர் வரை அமர்ந்து நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.
ஆனால் இப்போது அதற்கு அனுமதி இல்லை. சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இடவசதியை உருவாக்கி இருக்கைகள் போடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்.
சமூக இடைவெளியை கடைபிடிக்காத ஓட்டல்களுக்கு அபராதமும் விதிக்கப்படும். குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பாதுகாப்பு தடுப்பு விதிமுறைகளையும் ஒவ்வொரு ஓட்டல்களிலும் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டல் பாதுகாப்பு உயர் அதிகாரி கூறுகையில், ‘‘எங்கள் ஓட்டலுக்கு வரும் விருந்தினர்களின் நலன்தான் முக்கியம். அதன் அடிப்படையில் அவர்களுக்கு அனைத்து உடல்நலம் சார்ந்த மருத்துவ அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
கொரோனா பாதுகாப்பு தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிறிதளவு கொரோனா அறிகுறி இருந்தாலே அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளோம்.
எங்கள் ஓட்டலை பொறுத்தவரையில் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள்தான் தற்போது பணியில் உள்ளனர். கொரோனா அறிகுறி இருந்தவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நட்சத்திர ஓட்டல்களில் வெளிநாட்டு பயணிகள்தான் அதிகளவில் தங்குவது வழக்கம். எனவே அவர்கள் மூலம் கொரோனா பரவியதா? அல்லது உணவுப் பொருட்களை கொண்டு வருவதன் மூலம் கொரோனா பரவியதா? என்பது பற்றியும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.