
புதுச்சேரி:
புதுவையில் 2011-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
இதனை சுட்டிகாட்டி, கண்டிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருந்தார். ஜம்மு-காஷ்மீர் மக்களுக்காக ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை காணொலி மூலமாக தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, ஜம்மு-காஷ்மீரில் நடந்த தேர்தல்கள் நம் நாட்டில் ஜனநாயகம் எவ்வளவு வலுவானது என்பதைக் காட்டுகிறது.
ஆனால், 2018-ல் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதிலும் புதுவையில் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்கள் நடக்கவில்லை.
புதுவை அரசு தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை தவிர்த்து வருகிறது. ஜனநாயகம் குறித்து எனக்கு பாடம் நடத்துபவர்கள் தான் புதுவையில் ஆட்சியாளர்களாக இருக்கின்றனர் என்று கூறினார்.
இதற்கு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பதில் அளித்து கூறியதாவது:-
பிரதமர் மாநில அரசாங்கத்தை குற்றம் கூறுவது அர்த்தமே கிடையாது. மாநில அரசிற்கு உண்டான அதிகாரத்தை முழுமையாக பறித்து கொண்டு கவர்னர் இந்த தேர்தலை நடத்தவில்லை. இதை பிரதமர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
மாநில உரிமையை பறிப்பது தான் ஜனநாயகமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமையை பறிப்பது ஜனநாயகம் இல்லை என்று பிரதமருக்கு தெரியவில்லை. அவர் ஜனநாயகத்தை பற்றி பேசுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜனநாயக முறைப்படி ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்தியதாக கூறுகிறார். ஆனால் வேட்பாளர்களை வீட்டை விட்டு வெளியே வர விடாமல் செய்வது தான் ஜனநாயக முறையா? வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வெளியே செல்ல முடியவில்லை.
சிறைப்பிடித்து வீட்டுக் காவலில் வைத்து இருந்தனர். இதனால் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இது ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலா?
அப்படியிருந்தும் காஷ்மீர் வாழ் மக்கள் பா.ஜனதா கட்சிக்கு எதிராகத் தான் இந்த தேர்தலில் வாக்களித்து உள்ளனர். ராணுவத்தை வைத்து கொண்டு முழுவதுமாக அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு எந்த விதமான தகுதியும் கிடையாது. மத்திய அரசாங்கமே ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
இதனிடையே புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் கூறியது போல புதுவை யூனியன் பிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புக்கு தேர்தல்கள் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற பகுதிகள் வளர்ச்சிக்கான நிதியை இழந்து விட்டது. மேலும் போதிய சுகாதாரம் இல்லை, மோசமான நீர், அட்டவணை மேலாண்மை, வறட்சி, பள்ளி கல்வி மற்றும் பல பாதிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு கிரண்பேடி பதிவிட்டுள்ளார்.