
சென்னை ஐ.ஐ.டி.யில் விடுதியில் தங்கி படித்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியது. இதையடுத்து விடுதியில் தங்கி இருந்த அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
நேற்று முன்தினம் 419 பேருக்கு நடந்த சோதனையில் 104 பேருக்கு கொரோனா உறுதியானது. அதைத்தொடர்ந்து நேற்று 514 பேருக்கு நடத்திய பரிசோதனையில் 79 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் மீண்டும் 141 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 8 பேருக்கு பாதிப்பு இருப்பது இன்று தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஐ.ஐ.டி. மாணவர்கள் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் ஐ.ஐ.டி. வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மாணவர்கள் மட்டுமின்றி பேராசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
விடுதி கேண்டீன் ஊழியர் மூலம் கொரோனா பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் விடுதி அறையில் இருந்து வெளியே வரவேண்டாம் எனவும் உணவு மாணவர்களின் அறைக்கு பார்சலாக அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் கிண்டி கிங் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில் கொரோனா தொற்று குறைந்த வந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு தொற்று பரவி இருப்பது சுகாதாரத்துறையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஐ.ஐ.டி.யில் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுக்கு தொற்று பரவி உள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிக்கும் மாணவர்கள் சிலருக்கு அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 6 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதா கிருஷ்ணன் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஐ.ஐ.டி. வளாகங்களில் இன்று ஆய்வு செய்தார். சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார்.
ஐ.ஐ.டி. மாணவர்கள் மேலும் 8 பேருக்கு இன்று தொற்று உறுதியாகி உள்ளது. இது தவிர அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளி நபர்கள் வராத வகையில் சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாணவர்கள் பதட்டம் அடைய தேவையில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகள் சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்பட்டுள்ளன. ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகள், ஆய்வு மையங்கள் மூடப்பட்டுள்ளன.
தொற்று குறைந்து விட்டதாக அலட்சியம் காட்ட வேண்டாம். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களும் நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
கல்லூரி உணவுகங்களில் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஆய்வகங்கள் மற்றும் கல்லூரி வளாகங்களில் தனி நபர் இடைவெளியே கடைபிடிக்க வேண்டும். அலட்சியம் போக்கில் செயல்படும் கல்லூரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் ஜெகதீசன், மகாலட்சுமி, திருமுருகன், கோமதி, கண்ணன், பரசுராமன், கலை ஆகியோர் உடன் இருந்தனர்.