
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
உழவர் பேரணி, கட்சி நிர்வாகிகள் கூட்டம், ராகுல் காந்தியுடன் காணொலி மூலம் உரையாடல், மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்த நிலையில் கே.எஸ்.அழகிரிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து 10 நாட்களுக்கு முன்பு நந்தம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படிப்படியாக கொரோனா பாதிப்பில் இருந்து கே.எஸ்.அழகிரி குணம் அடைந்து வந்தார்.
தற்போது முழுமையாக குணம் அடைந்து விட்டார். எனவே, அவர் விரைவில் வீடு திரும்ப உள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒருவர் கூறியதாவது:-
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி முழுமையாக குணம் அடைந்து விட்டார். இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அடுத்த மாதம் பொங்கலுக்கு பிறகு தமிழகம் வருகிறார். ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக ஏர் கலப்பை பேரணி நடந்தது.
இதன் நிறைவாக அடுத்த மாதம் பிரமாண்ட விவசாயிகள் பேரணி நடைபெற உள்ளது. இதில் ராகுல்காந்தி பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை. இந்த பேரணியை பிரமாண்டமாக நடத்த கே.எஸ்.அழகிரி திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.