
சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் தேர்தலை எதிர் கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாகி வருகின்றன.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.வும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாகி வருகிறது. 2006 மற்றும் 2011 ஆகிய 2 தேர்தல்கள் மட்டுமே தே.மு.தி.க.வுக்கு வெற்றிகரமாக அமைந்துள்ளது.
இதன்பிறகு கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் தே.மு.தி.க தோல்வி அடைந்தது.
இதையடுத்து வருகிற தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் தே.மு.தி.க உள்ளது. அதற்கான வியூகங்களை அந்த கட்சி வகுத்து வருகிறது. வருகிற தேர்தலில் 41 இடங்களை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று நேற்று நடைபெற்ற தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் தே.மு.தி.க. வுக்கு வருகிற தேர்தலில் அதிகபட்சமாக 15 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அ.தி.மு.க. தலைவர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர்.
குறைந்த அளவிலான இடங்களை ஒதுக்கினால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க நீடிக்குமா? என்பது கேள்விக்குறியே என தே.மு.தி.க நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். 2006-ம் ஆண்டு தே.மு.தி.க. வுக்கு ஒதுக்கப்பட்டது போல கூடுதல் இடங்களை இந்த முறை கேட்டு பெறுவோம் என்றும் அந்த நிர்வாகி தெரிவித்தார்.