
சென்னை:
சென்னை உள்ளிட்ட 50 இடங்களில் எம்.ஏ.எம். ராமசாமி குடும்பத்தினருக்கு சொந்தமான செட்டிநாடு குழும நிறுவனங்களில் இன்று வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
தமிழகத்தில் சென்னையில் மட்டும் 40 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆயிரம் விளக்கு, ராஜா அண்ணாமலைபுரம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், அரண் மனைகள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்டவைகள் இயங்கி வருகின்றன.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இந்த நிறுவனங்களில் வரிஏய்ப்பு நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
கோவை ரேஸ்கோர்சில் உள்ள செட்டி நாடு பில்டர்ஸ் நிறுவனத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனை காரணமாக நிறுவனத்தில் இருந்து யாரும் வெளியே செல்லவும், உள்ளே வரவும் அனுதிக்கப்படவில்லை.
முன் பக்க கேட் மற்றும் கதவு, ஜன்னல்களை அடைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனை காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கரூரிலும் செட்டிநாடு குழும நிறுவனங்களில் சோதனை நடைபெற்றது.
சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரி சோதனை நடைபெறுகிறது. ஒரே நேரத்தில் சுமார் 250 அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.
அனைத்து நிறுவனங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் ஆவணங்களை சரிபார்த்து வரி ஏய்ப்பு தொடர்பான தகவல்களை திரட்டி வருகிறார்கள்.
இந்த சோதனையின் போது நிறுவனங்களுக்குள் யாரையும் வருமானவரித் துறையினர் அனுமதிக்க வில்லை. உள்ளே இருந்தவர்களும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
செட்டிநாடு குழும நிறுவனங்களில் கடந்த 2015-ம் ஆண்டும் இதேபோன்று வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
அப்போது நடந்த சோதனையில் செட்டிநாடு குழுமத்தில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது.
அந்த வகையில் இந்த முறையும் கைப்பற்றி உள்ள ஆவணங்களை வைத்து வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இன்று மாலை வரையில் இந்த சோதனை நடைபெறும் என்று வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். சோதனை முடிவில் வரி ஏய்ப்பு தொடர்பாக அறிக்கை வெளியிடவும் வருமானவரித்துறை முடிவு செய்துள்ளது.