
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு பொறுப்பாளரும், அமைப்பு செயலாளருமான சி.பொன்னையன் மாலைமலர் நிருபருக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்து விட்டதா?
பதில்:- அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நல்ல பல திட்டங்கள் இடம்பெறும் வகையில் பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவிலும் பல்வேறு கோரிக்கைகள் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. அவைகளை தொகுத்து உயர் மட்ட கமிட்டியில் ஆலோசித்து நல்ல முடிவுகள் எடுப்போம்.
கேள்வி:- ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அ.தி.மு.க. ஓட்டு வங்கிக்கு பாதிப்பு ஏற்படுமா?
பதில்:- ரஜினிகாந்த் பல நீண்ட நெடுங்காலமாக அரசியலுக்கு வருவேன் என்று கூறிவந்தார். இப்போதும் கட்சி தொடங்கப் போவதாகத்தான் கூறி இருக்கிறார். அவர் முதலில் கட்சி தொடங்கட்டும். அதன் பிறகு பேசலாம்.
அவரது கட்சியால் மட்டுமல்ல எந்த கட்சியாலும் அ.தி.மு.க. ஓட்டு வங்கிக்கு பாதிப்பு வராது. ஏனென்றால் அ.தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கம் மிக வலுவாக உள்ள இயக்கம். 1½ கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம். எனவே அ.தி.மு.க.வுக்கு பாதிப்பை உருவாக்கக்கூடிய ஒரு சக்தியாக ரஜினியின் அரசியல் பிரவேசம் இருக்காது.
கேள்வி:- சிறுபான்மையினர் ஓட்டை பிரிப்பதற்காக ரஜினியை பா.ஜனதா முன் நிறுத்துவதாக சொல்லப்படுகிறதே?
பதில்:- ரஜினிகாந்த் ஆர்.எஸ்.எஸ். நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகத்தான் அவரது செயல்பாடுகள் இருந்து வந்தன. எனவே தமிழ்நாட்டில் அவரது முயற்சிகள் எதுவும் எடுபடாது.
கேள்வி:- ஆன்மீக அரசியலை கொண்டுவரப் போவதாக ரஜினிகாந்த் கூறி இருக்கிறாரே அவர் வந்தால் அரசியலில் மாற்றம் ஏற்படுமா?
பதில்:- ரஜினியின் அரசியல் பிரவேசம் திராவிட பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் பெரிய மாற்றம் எதையும் உருவாக்கிவிடாது.
கேள்வி:- வருகிற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் மேலும் பல கட்சிகள் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா?
பதில்:- அதை இப்போதே சொல்ல முடியாது. கூட்டணி சம்மந்தமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உயர்மட்ட குழுவினர் சேர்ந்து முடிவு எடுக்கக்கூடிய விஷயம். அதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது.
கேள்வி:- அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கி விட்டதா?
பதில்:- அதை கட்சியின் உயர்மட்ட குழு தான் முடிவு செய்யும்.
கேள்வி:- சசிகலா விரைவில் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வர உள்ளார். அவரது வருகை அ.தி.மு.க.வில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
பதில்:- சசிகலா வெளியே வந்தாலும் வலுவான நிலையில் இருக்கிற ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க.வில் எந்த தாக்கமும் ஏற்படாது.
இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தலைமையில் இயங்குகிற இந்த கட்சி மீதும், ஆட்சி மீதும் கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ளவர்கள் ஈர்ப்பு சக்தியோடு பணியாற்றுகிறார்கள்.
சசிகலா வேறொரு அரசியல் இயக்கத்துக்கு சொந்தமானவர். எங்கள் கட்சிக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
கேள்வி:- அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளதால் வருகிற தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு உண்டா?
பதில்:- அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு போதுமான பலத்துடன் தேவையான தொகுதிகளில் போட்டியிடும்.
கேள்வி:- அ.தி.மு.க.வில் புதிய மாவட்ட செயலாளர்கள் நிறைய பேர் நியமிக்கப்பட்டுள்ளார்களே?
பதில்:- 6 தொகுதிக்கு மேல் ஒரு மாவட்ட செயலாளர் பார்த்து வந்த நிலையில் தற்போது அதை பரவலாக்கி 2 அல்லது 3 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம் என்பது கட்சியின் மக்கள் பணியை சிறப்பாக கொண்டு வர முடியும் என்பதற்காகத்தான்.
அதன் அடிப்படையில் தான் அனைத்து நிலைகளிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது கட்சி தொண்டர்கள் மத்தியிலும், நிர்வாகிகள் மத்தியிலும் புதிய உத்வேகத்தை கொண்டு வந்துள்ளது.
கேள்வி:- எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் குடிநீர் பிரச்சனை இல்லாத அளவுக்கு மழை பெய்து ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறதே?
பதில்:- முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இணைந்து நடத்தும் நல்லாட்சியில் இயற்கையின் அருளால் குடிநீர் பிரச்சனை இல்லாத அளவுக்கு ஒவ்வொரு வருடமும் போதுமான மழை பெய்கிறது.
அதுமட்டுமல்ல முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்துள்ள குடிமராமத்து திட்டம் நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில் ஒரு தொலைநோக்கு திட்டமாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.