
புதுவையில் விவசாயிகளுக்கு ஆதரவான பந்த் நடைபெற்றது. இதையொட்டி புதிய பஸ் நிலைய வாசலில் சாலை மறியல் நடந்தது.
அப்போது மறைமலை அடிகள் சாலை வழியாக முதல்-அமைச்சர் நாராயணசாமி காரில் வந்தார். மறியலை பார்த்த அவர் காரை விட்டு இறங்கி மறியலில் ஈடுபட்ட தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
பாராளுமன்றத்தில் ஜனநாயக விரோதமாக எதிர்கட்சிகள் எதிர்ப்பை மீறி 3 வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜனதா அரசு நிறைவேற்றியது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான இந்த சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்கட்சிகள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பிலும், விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகிறது. காங்கிரஸ் தொண்டன் என்ற முறையில் மறியலில் ஈடுபட்ட தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன். அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தும்படி கேட்டுக்கொண்டேன். புதுவையில் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.