
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாநில மொழி அல்லது தாய்மொழியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை, துணை ஆணையரின் அனுமதி பெற்று நியமித்துக் கொள்ளலாம். ஆறாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரையிலும், தேவைப்பட்டால் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் கூடக் கற்றுத் தரலாம்.
பள்ளி நேரத்திலேயே வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் இதற்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கேந்திரிய வித்யாலயா கல்வி விதி 112-ம் பிரிவில் கூறப்பட்டு உள்ளது.
2013-14-ம் கல்வி ஆண்டில் இருந்து தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இவை நடைமுறைக்கு வந்து, தமிழ்மொழி கற்பிக்கப்பட்டு வந்தது.
தேர்ச்சி பெறுவதற்கு, தமிழ் பாடத்தில் தேர்வு எழுதி மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பது இல்லை.இருந்தாலும் தமிழக கேந்திரிய பள்ளிகளில் தமிழ் மொழியைக் கற்றுத்தர போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் ஆசிரியர்கள் சங்கம், கடந்த ஐந்து ஆண்டுகளாக துணை ஆணையருக்குக் கோரிக்கை வைத்து வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில் தற்போது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தாய்மொழி தமிழ் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், அதற்காக பகுதி நேர ஆசிரியர்கள் மட்டும் நியமனம் செய்யப்படுவர் என்றும், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் மொழியைக்கற்பிக்கவும், அதற்குத் தேவையான ஆசிரியர்களை நிரந்தரப் பணியில் நியமனம் செய்யவும்,மற்ற பாடங்களைப் போலவே தமிழ் மொழியையும் பயிற்று விக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் விதிப்படி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் விதிமுறைகளின் படி ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ்மொழி கற்றுக் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தமிழகத்தின் தாய் மொழியான தமிழ் மீது, மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுள்ள மறைமுகமான வெறுப்புணர்வை வெளிக் காட்டுகிறது. இத்தகைய அறிவிப்பை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழியை அனைத்து வகுப்புகளிலும் அனைத்து நாட்களிலும் பயிற்றுவிக்க வேண்டும். தமிழக அரசும் இந்த விவகாரத்தில் கவனமெடுத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.