
சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்தாலும் தீபாவளி பண்டிகை வருவதால், கூட்ட நெரிசலில் காற்றின் மூலம் வேகமாக கொரோனா பரவும் என்ற அச்சம் நிலவுகிறது.
வட மாநிலங்களில் தசரா பண்டிகைக்கு பிறகு டெல்லி, கர்நாடகா மாநிலங்களில் அதிகளவு கொரோனா பரவி விட்டது. கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பிறகு கொரோனா மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது.
அதே நிலைமை தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு கொரோனாவின் தாக்கம் அதிகமாகிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதற்காக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. 7 லட்சம் பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். ஒரு சிலர்தான் இதில் இறந்து விடுகின்றனர். கடுமையான களப்பணியால் தான் இந்தளவு முன்னேற்றத்திற்கு வந்துள்ளோம். கொரோனா இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
இதற்காக பொதுமக்களிடம் முகக்கவசம் அணியுங்கள் என்று தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். கொரோனா காற்றில் பரவுகிறது என்று சிலர் சொல்கிறார்கள். சிலர் ஒருவர் மூலம் மற்றொருவருக்கு பரவுகிறது என்கிறார்கள். ஒவ்வொரு ஆராய்ச்சியாளர்களும் ஒவ்வொரு விதமாக கூறுகிறார்கள். ஆனால், எந்த வழிமுறை மூலம் இதனை தெரிவிக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக சொல்வது இல்லை.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு இருமல் வந்தால், 2 மீட்டர் தூரம் வரை நீர்த்துளிகள் பரவும் என்பது உண்மை. அதில் உள்ள நுண் வைரஸ் கிருமிகள் எதிரே இருப்பவர்களுக்கு உடனே பரவும் என்பதும் உண்மை.
இதில் இருந்து நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், முகக் கவசம் அணிந்திருந்தால்தான் முடியும். எனவே அந்த வகையில்தான் எங்கே சென்றாலும் முகக்கவசம் அணியுங்கள் என்று கூறி வருகிறோம்.
தற்போது தீபாவளி பண்டிகை என்பதால், கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் தனிக்கவனம் செலுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். தி.நகர் போன்ற இடங்களில் மக்களின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது. ஒரு சில பகுதிகளில் ஒத்துழைப்பு குறைவாகவே உள்ளது.
எனவே பொதுமக்களுக்கு நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்வது அடுத்தவர் முன்பு நிற்கும்போதும், நடந்து செல்லும் போதும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்லுங்கள். அதுதான் உங்களை பாதுகாக்கும்.
ஒவ்வொருவருக்கும் சுயக் கட்டுப்பாடு அவசியம். வீட்டுக்குள் உணவு அருந்தும் போது கூட ஒரே அறையில் 10 பேர், 20 பேர் அமர்ந்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. திறந்தவெளியில் அமர்ந்து சாப்பிடுவதும் கூட பாதுகாப்பானது தான்.
கொரோனா எப்படி பரவும்? யாருக்கு வரும்? என்பதை யாராலும் சொல்ல முடியாது. நாம் முகக்கவசம் அணிவதுதான் ஒரே பாதுகாப்பு.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், அரசு ஆஸ்பத்திரிக்கு நான் நேற்று ஆய்வு செய்ய சென்றேன். அங்குள்ள கொரோனா வார்டில் இரண்டரை மணி நேரம் இருந்தேன். முகக்கவசம் அணிந்திருந்ததால், எனக்கு கொரோனா வரவில்லை. கொரோனாவை தடுக்க முகக்கவசம்தான் சிறந்த வழி. இதை ஒவ்வொருவரும் கடைபிடியுங்கள். சாப்பிடுவதற்கு முன்பு கிருமிநாசினி மூலம் கைகளை கழுவுங்கள். இந்த இரண்டையும் பின்பற்றினாலே போதும்.
தீபாவளி பண்டிகை என்பதால் பல பகுதிகளில் கூட்டம் அதிமாகவே உள்ளது. பலதரப்பட்ட மக்களும் வந்து செல்வதால், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது அவசியம். அதற்கு முகக்கவசம் கண்டிப்பாக தேவை.
லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடங்களில் காற்றின் மூலம் பல கிருமிகள் வருவதுண்டு. எத்தனையோ நோய்கள் அதன் மூலம் வந்துவிடும். இப்போது தீபாவளி சமயம். பல இடங்களில் தீபாவளி பட்டாசுகளை வெடிக்கும் போது அதில் உள்ள ரசாயனக் கலவைகள் காற்றில் கலப்பது இயற்கை. இது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதில் இருந்து தப்பிக்கவும் முகக்கவசம் தான் பயன்படுகிறது.
எனவே எல்லா நோய்களில் இருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்கு இப்போது முகக்கவசம் மிகவும் அவசியம். அதை அணிந்து கொண்டால் பெரும்பாலான நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.