
கடலூர்:
தே.மு.திக. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் கோவிலுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் 3 அணி அமைய வாய்ப்பு உள்ளதா ? என விஜய்பிரபாகரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு விஜய்பிரபாகர், தமிழ்நாட்டில் தேர்தல் வரும்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். மேலும் தே.மு.தி.க. பலமுறை தனித்து போட்டியிட்டு தேர்தல் களத்தை சந்தித்து உள்ளது.
ஆகையால் பொறுத்திருந்து பாருங்கள் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் இன்றுவரை நாங்கள் தற்போது அ.தி.மு.க கூட்டணியில் தான் உள்ளோம். மேலும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற பிறகு தேர்தல் நிலை குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெளிவாக அறிவிப்பார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்த எந்த அணி கூட்டணி அமைக்க போகிறார்கள், யார் யார் எத்தனை சீட்டு ஜெயிக்க போகிறார்கள் எல்லாம் ஒரு புதிராகத்தான் உள்ளது. ஏனென்றால் தற்போது நடக்க உள்ள தேர்தல் எல்லோருக்கும் முதல் தேர்தலாகும்.
ஏனென்றால் கருணாநிதி இல்லாமல் ஸ்டாலின், ஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க. தேர்தல் களத்தை சந்திக்க உள்ளனர். இதனால் எல்லோருக்கும் இந்த தேர்தல் புது தேர்தல் ஆகும்.இதனால் நிச்சயமாக இந்த தேர்தல் மாற்றத்தை மக்களுக்கான நல்ல ஒரு தமிழ் நாட்டை உருவாக்க நல்ல வெற்றியை நிச்சயமாக கடவுள் தருவார் என நம்புகிறேன்.
அ.தி.மு.க. ஆட்சி பற்றி எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் மு.க. ஸ்டாலின் எதிரான கருத்தை தான் பதிவு செய்து வருவார். எங்களைப் பொறுத்தவரைக்கும் இந்த ஆட்சி நிறையும், குறையும் நிறைந்த ஆட்சியாக நாங்கள் பார்க்கிறோம். ஏனென்றால் நல்ல விஷயம் அதிமுக பல நல்லது செய்து உள்ளனர். இந்த கொரோனா காலத்தில் நல்ல நிர்வாகத் திறனை வெளிப்படுத்தி மக்களுக்கு தேவையான பல பணிகள் செய்து உள்ளனர். இதேபோல் அவர்கள் செய்ய வேண்டிய நிறைய விஷயங்கள் செய்யாமல் உள்ளனர். அதனை நாங்கள் சுட்டிக் காட்டுவோம்.
ஏனென்றால் மழை காலத்தில் தற்போது சாலை சரியாக இல்லாமல் குண்டு குழியுமாக காட்சி அளித்து உள்ளது. மேலும் நீர்நிலைகள் சரியான முறையில் தூர்வாரி தண்ணீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடை காலத்தில் குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கு தண்ணீர் சரியான முறையில் சேமிக்க முடியாமல் உள்ளது. மேலும் நிர்வாக ரீதியாக செய்ய வேண்டியது பலது உள்ளது. இதனால் அ.தி.மு.க. ஆட்சி நிறையும் குறையும் சரி சமமாக உள்ளது.
ஆனால் 2021 தேர்தல் மக்களாட்சியாக தமிழகத்திற்கு விடிவுகாலம் வரக்கூடிய ஆட்சியாக அமையும். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 10 வருடத்திற்கு முன்பு 60 வயதாகும். தற்போது இவருக்கு 70 வயது ஆகும். ஆகையால் யாராக இருந்தாலும் வயது கூடினால் உடல் நிலையில் மாற்றம் வரக்கூடும். ஆகையால் தேர்தல் நேரத்தில் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் வருவார். தற்போது நல்ல உடல் நலமுடன் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.