
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதற்காக பொதுமக்களிடையே முகக்கவசம் அணியும் பழக்கத்தை விழிப்புணர்வு மூலம் உருவாக்கினோம். கிருமிநாசினி மூலம் கை கழுவ வேண்டும் என்பது பிரசாரங்கள் மூலம் மக்கள் மனதில் பதிய வேண்டும்.
கபசுர குடிநீர் குடித்தால் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும் என்பதை வீட்டுக்கு வீடு எடுத்துச் சொன்னோம்.
இதன் பலனாக மக்கள் இவற்றை பின்பற்ற தொடங்கினார்கள். இப்போதைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைவருமே கபசுர குடிநீர் அருந்தி அதன் பலனை அறிந்துள்ளனர். இதன் காரணமாக ஒவ்வொருவரின் உடலிலும் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் தற்போது இறப்பு விகிதங்கள் பெருமளவு குறைந்து விட்டது. கொரோனா பாதிப்பு அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் ஏராளமான படுக்கை வசதிகள் கொண்ட தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதுதவிர பள்ளி, கல்லூரிகளிலும் தனிமைப்படுத்திக் கொள்ளும் வகையில் இடவசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது பள்ளி-கல்லூரிகளில் முகாம்கள் தேவைப்படவில்லை. ஆஸ்பத்திரிகளிலும் கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்கள்தான் உள்ளனர்.
ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சுகாதார பணியாளர்கள் தொடர்ந்து களப்பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். வீடுகளில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி லேசானதாக இருந்தாலும் மருத்துவமனைக்கு செல்லுமாறு மக்களை ஊக்குவித்தோம். இதன் பலனாக ஆரம்பத்திலேயே கொரோனா பாதிப்பு அடைந்தவருக்கு உடனடி சிகிச்சை அளிக்க முடிகிறது.
ஒவ்வொருவருக்கும் ஊட்டச்சத்து மாத்திரைகள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்படுவதால் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
ஆரம்பத்தில் கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அதிக கட்டமைப்பு வசதி கொண்ட ஆஸ்பத்திரிகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க முன் வந்தன. இதன் பிறகு பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளும் இதற்கான கட்டமைப்பை உருவாக்கி சிகிச்சை மேற்கொள்கின்றன.
தற்போது மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா வேகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் ஒரு காரணமாகும்.
தற்போது தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள் வருவதால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
ஆனாலும் ஒவ்வொரு இடங்களிலும் பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.