
புதுடெல்லி:
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இதனால் மக்கள் வங்கிகளில் பெற்ற கடன்களின் மாத தவணையான இ.எம்.ஐ.யை திருப்பி செலுத்த 6 மாதங்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதாவது ஆகஸ்டு 31-ந் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
முதலில் 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் மேலும் 3 மாதங்களுக்கு மாதத்திர தவணையை செலுத்த சலுகைகள் அளிக்கப்பட்டது.
ஆனால் வங்கிகளில் கட்டாத மாத தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி வங்கிகள் கடன் பெற்றவர்களிடம் இருந்து தொடர்ந்து வட்டி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசை சுப்ரீம் கோர்டு கடுமையாக சாடியிருந்தது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் போதிய அதிகாரம் உள்ள நிலையில், மத்திய அரசு ரிசர்வ் வங்கி பின்னால் ஒளிந்து கொள்வதா? என்று கண்டனம் தெரிவித்து இருந்தது.
மத்திய அரசின் நிலை பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், வங்கி கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை என்று இந்த மாத தொடக்கத்தில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்தது. அப்போது ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்பட மாட்டாது. ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டி மீது வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.
இதனால் வங்கிகளில் தவணை கட்ட தவறியவர்களுக்கும், சிறு தொழில் புரிபவருக்கும் பலன் கிடைக்கும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கல்வி, வீட்டு வசதி, நுகர்வோர் பொருட்கள், வாகன கடன், கிரெடிட் கார்டு ஆகியவற்றின் நிலுவை தொகைகளுக்கான வட்டி தள்ளுபடி இதில் பொருந்தும்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வட்டியை தள்ளுபடி செய்யும் சுமையை அரசாங்கம் சுமப்பதே இதற்கு ஒரே தீர்வு என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சமர்பித்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வருகிற திங்கள்கிழமை வருகிறது.