
திருச்சி:
உலகமெங்கும் மக்களை பெரிய துயரத்திற்கு ஆழ்த்தி வரும் கொடிய வைரஸ் கொரோனா நோயை கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பெண்களை அதிகமாக தாக்கும் மார்பக புற்று நோய் தற்போது பெண்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. மேலும் உலகமெங்கும் தற்போதைய அக்டோபர் மாதம் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த மார்பக புற்று நோயால் வருடத்திற்கு 2.1 மில்லியன் பெண்கள் பாதிக்கப்பட்டு, பலர் உயிரிழக்கின்றனர். இதனை கண்டறியும் விதமாக வருடத்திற்கு ஒரு முறை 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மருத்துவ மனைகளுக்கு சென்று ஸ்கிரினிங் என்னும் சோதனை முறை மூலம் பரிசோதனை செய்வதன் காரணமாக மார்பக புற்று நோய் இருக்கிறதா இல்லையா? என்று அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் அச்சத்தினால் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கடந்த 6 மாத காலமாக தனக்கு மார்பக புற்று நோய் அறிகுறிகள் கண்டறியும் ஸ்கிரினிங் சோதனை முறைக்கு மருத்துவமனைகளுக்கு செல்வதற்கு அச்சம் அடைந்துள்ளனர். மேலும் அவர்களாகவே தாமாக முன்வந்து இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.
இந்த மார்பக புற்றுநோயின் முதல்கட்ட அறிகுறியாக சாதரணமாக பெண்கள் மார்பகத்தில் சிறிய வலி ஏற்படுவதோடு, தோல் தடிமனாக மாறும். இதனை பெண்கள் முதலிலேயே அறிந்து கொண்டு மருத்துவ மனைக்கு சென்று முறையான சிகிச்சை பெற்று விட்டால் நோயின் தாக்கம் குறைந்துவிடும். மேலும் உயிரை காப்பாற்றிவிடலாம். இல்லையென்றால் உயிர்ப் பலிகள் ஏற்படும்.
எனவே பெண்களின் மத்தியில் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக மார்பக புற்று நோய் எளிதில் யாருக்கும் வருவதில்லை. அவ்வாறு வருவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்பட்டால் உடனடியாக ஸ்கிரினிங் சோதனை செய்துவிடவேண்டும். அவர்களுக்கு கீமோ தெரபி, ரேடியேசன் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் நோயில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
மேலும் கிராமப்புற பெண்களுக்கு அதிக விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. அவர்களுக்கும் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்தில் 36 முகாம்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வகை புற்றுநோய் பெண்கள் உடலில் இருந்தால் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவமனையை நாடினால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம். கொரோனா காலத்திற்கு முன்னர் வரை மாதம் ஒன்றுக்கு 30 பேர் வரை பரிசோதனைக்காக வந்து சென்றனர். த ற்போது அதுவே 20 நபர்களாக குறைந்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் தொடர்ந்து இருப்பதாலும், அச்சம் காரணமாகவும் பெண்கள் புற்று நோயை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அலட்சியமாக இருந்து வருவதாக தெரிகிறது. குறிப்பாக மாத விடாய் முடிந்தவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு முன்பாக பெண்கள் தாங்களாகவே மார்பக புற்றுநோய்க்கு சுய பரிசோதனைகள் செய்து கொள்ளலாம். அவர்களுக்கு நோய் அறிகுறி இருந்தால் தொலைபேசி மூலமாகவும் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆகவே பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.