
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸ் கால்சென்டர் தொடங்கப்பட உள்ளதை முன்னிட்டு அதற்கான பணிகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் .சி.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், 19 ஊழியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆயிரத்து 505 இயங்கி வருகின்றன. கொரோனா நோயாளிகளை கையாள்வதற்கு மட்டும் பிரத்யேகமாக 450 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகிறது.
ஆம்புலன்ஸ் சேவையை மேலும் வலுப்படுத்துவதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. சென்னையில் விபத்து ஏற்பட்டால் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வருவதற்கு 8 நிமிடங்கள் ஆகிறது. அதை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் எத்தனை நிமிடத்தில் வரும் என்று பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் சாப்ட்வேர் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும். உலகிலேயே இந்த முறை தமிழகத்தில் மட்டுமே பின்பற்றப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் சுகாதார கட்டமைப்பு இங்கு உள்ளது. நாட்டிலேயே சிறந்த மருத்துவமனையாக ஓமந்தூரார் மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய சாதனை.
தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டெங்கு, சிக்குன் குனியா தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு வாரத்திற்குள் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை செய்வதற்காக தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.