
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. தொ.மு.ச. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 9 அடி உயர முழுஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
மத்திய-மாநில அரசுகள் தொழிலாளர்களின் துரோக அரசுகளாக உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மட்டுமே 2 அரசுகளும் செயல்படுகிறது.
தொழிலாளர்களுக்காக பிரதமர் அறிவிக்கும் பல கோடி ரூபாய் திட்டங்கள் வாக்குறுதிகளாகவே உள்ளது. நானும் விவசாயிதான் என்று கூறும் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் 8 வழிச்சாலை போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தவர்.
நீட் தேர்வு காரணமாக இறந்த மாணவர்களின் மரணம் தற்கொலை அல்ல. அது மத்திய-மாநில அரசுகள் நடத்திய கொலைகள். ஆனால், இந்த தற்கொலைக்கு காரணம் தி.மு.க.தான் என்று சட்டசபையில் முதல்- அமைச்சர் பேசுகிறார்.
மத்தியில் பாரதிய ஜனதா மற்றும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி செய்த 2016-ம் ஆண்டுதான் முதன் முதலில் நீட் தேர்வு நடந்தது. இந்த விசயத்தில் அ.தி.மு.க. திட்டமிட்டு பொய்பிரசாரம் செய்து வருகிறது. 2013-ம் ஆண்டு மே 5-ந் தேதி கருணாநிதி நீட்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
பின்னர் 7 மாநில முதல்-அமைச்சர்கள் சுப்ரீம் கோர்ட்டில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தாக்கல் போது தமிழக அரசு ஏன் இணையவில்லை.
முதல்-அமைச்சர் பழனிசாமியின் ஆட்சி இன்னும் 6 மாதங்கள் மட்டுமே. அதன்பின்னர் ஆட்சி மாற்றம் உறுதியாகி விட்டது. மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி விட்டனர். அதற்கேற்றவாறு நாம் தேர்தல் பணிகளை முன்னெடுக்க இருக்கிறோம். எனவே, எவரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக தேர்தல் பணிக்கு தயாராகுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.