
மதுரை:
மதுரையில் நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜோதிஸ்ரீ துர்க்காவின் உடலுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியலுக்கு வர நினைப்பவர்கள் மக்களுக்கான திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்களான அண்ணா, எம்.ஜி.ஆர். போன்றவர்களை போன்று நாம் வரவேண்டும் என முன் உதாரணமாக கொண்டு மக்களுக்கு சேவையாற்றி மக்கள் மத்தியில் இடம்பிடிக்க வேண்டும்.
முன்னாள் தலைவர்களின் சேவை, மக்கள் தொண்டு எதனையும் அறியாமல் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியையும், கிராபிக்ஸ் யுக்திகளை பயன்படுத்தி பெரியார், எம்.ஜி.ஆர். போன்று சித்தரித்து மக்கள் முகம் சுழிக்கும் வகையில் போஸ்டர் கலாச்சாரத்தில் ஈடுபடுவதை மக்கள் வெறுக்கிறார்கள்.
முன்னாள் தலைவர்களை போன்று மக்கள் மத்தியில் சேவையாற்றினால் மட்டுமே அவர்களுக்கான அங்கீ காரம் கிடைக்கும். நேற்றுபெய்த மழையில் இன்று முளைத்த காளான்களை போன்று சிகை அலங்காரத்தை மட்டுமே மாற்றிக்கொண்டு போஸ்டர்களை அச்சடித்து ஓட்டுவதால் எந்த தாக்கமும் ஏற்படாது.
போஸ்டர் கலாச்சாரம் என்பது தவறான முன் உதாரணமாக உள்ளது. இதுவரை இல்லாத புதிய கலாச்சாராமாக எம்.ஜி.ஆர்., அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களை ஸ்டார்ட் செய்து போஸ்டர் ஒட்டுவது ஆரோக்கியமான அணுமுறை கிடையாது.
எம்.ஜி.ஆர்., அண்ணா, பெரியார் ஆகியோர் தலைவர் என்ற நிலையை தாண்டி தெய்வமாக வணங்க வேண்டியவர்கள்
மாணவர்கள் நீட் தேர்வை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா முழுவதும் கொண்டுவரப்பட்டுள்ள நீட் தேர்வை தமிழகம் முழுமையாக எதிர்க்கிறது.
ஏழை, எளிய சாமானிய மக்கள் நீட் தேர்வினை எதிர் கொள்வதில் உள்ள சவால்கள் சாதாரணமானதாக இல்லை. நீட் தேர்வினை எதிர்கொள்ள வேண்டியதில் இன்னும் காலம் அவகாசம் தேவையுள்ளது. நீட் தேர்வை எதிர் கொள்வதில் இன்னும் தகுதியை வளர்த்துக் கொள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் தமிழக உறுதியாக உள்ளது.
வல்லரசு நாடுகளுக்கு இணையாக கல்வியின் தரத்தை மேம்படுத்தும் மத்திய அரசின் நோக்கு சரியாக இருக்கலாம். ஆனால் அதை எதிர்கொள்வதில் நமது தகுதியை வளர்த்துக் கொள்வதற்கான கால அவகாசம் என்பது நமக்கு தேவைப்படுகிறது.
மத்திய அரசின் நோக்கம் சரியானதாக இருக்கலாம். ஆனால் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்பதில் நிலையாக இருந்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
கல்வி, விளையாட்டு போன்ற துறைகளில் தைரியமாக போராடி வெற்றி பெற்றவர்களை முன் உதாரணமாக கொண்டு மாணவ செல்வங்கள் நம்பிக்கையோடு சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.
நீட் தேர்வு மட்டுமே நமது எதிர்காலம் என்று இல்லை. சாதனை பட்டியலில் இடம்பெற வேண்டுமே தவிர மாணவர்களின் உள்ளம் ஊணமாகிவிடக் கூடாது. வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஹாட்ரிக் வெற்றி பெறும். அ.தி.மு.க.விற்கே மக்கள் அணி அணியாக வாக்களிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.