
செங்கோட்டை:
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 2-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சுரண்டையில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன் தலைமை தாங்கினார்.
இதில் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து சுரண்டையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவாலயம் சென்று கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்தினார். கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வருவாய் அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
பின்னர் அங்கு 97 கர்ப்பிணி பெண்களுக்கு பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு, 100 விவசாயிகளுக்கு தென்னங்கன்று, 10 வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் சுரண்டை ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், முன்னாள் ஒன்றிய சேர்மன் அன்பு மணிகணேசன், கலைஞர் தமிழ் சங்க செயலாளர் ஆபத்துகாத்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
அருந்ததிய சமுதாய மக்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை கருணாநிதி அளித்தார். தற்போது உச்சநீதிமன்றம் அந்ததந்த மாநில அரசுகளே உள் ஒதுக்கீடு வழங்கலாம் என கூறியிருப்பது வரவேற்கதக்கது.
இதன் மூலம் கருணாநிதி கொண்டு வந்த திட்டம் செல்லும் என உறுதிப்படுத்தியுள்ளது. தமிழக அரசு கொரோனா என்ற பெயரில் பல கோடி ரூபாயை விரயம் செய்து வருகிறார்கள், இந்த இக்கட்டான தருணத்திலும் ஆளும் அரசு மக்கள் பணியாற்றவில்லை. தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்க போகும் கட்சி தி.மு.க. தான் என்பது தெளிவாக தெரிந்து விட்டது. மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்திவரும் மத்திய அரசை எதிர்த்து இந்தியாவில் எழுப்பப்படும் முதல் குரலாக தி.மு.க.வின் குரல் இருக்கும். மக்கள் விரோத திட்டங்களை எதிர்ப்பதால் தான் பா.ஜ.க.வினர் தி.மு.க.வின் மீது பல்வேறு விமர்சனங்களை வைக்கின்றனர்.
இ-பாஸ் விசயத்தில் முதல்வர் யாருடைய ஆலோசனையையும் கேட்க தயாராக இல்லை. இ-பாஸ் தேவையில்லை என தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பல மாநிலங்களில் இதனை ரத்து செய்துவிட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.