
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள்.
இந்த வழக்கு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கைதான 3 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர். பின்னர் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகி வருகின்றனர்.

அப்போது பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள். நிர்மலாதேவி ஆஜராகவில்லை.
இதைத்தொடர்ந்து அவருக்கு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பரிமளாதேவி உத்தரவிட்டார்.
இதற்கிடையே தலைமறைவாக இருந்த நிர்மலா தேவி இன்று வீடு திரும்பினார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலாதேவியை 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி பரிமளாதேவி உத்தரவிட்டார். அவரது உத்தரவைத் தொடர்ந்து நிர்மலா தேவி மதுரை அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நிர்மலாதேவி சார்பில் கோர்ட்டில் ஆஜரான வக்கீல் பசும்பொன் பாண்டியன் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக நிர்மலாதேவி எங்கிருந்தார்? என்பது தெரியவில்லை. அவரை அமைச்சர் யாராவது மிரட்டியிருக்கலாம். அதன் காரணமாக அவர் தலைமறைவாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன் என்றார்.