
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
புதுவையில் எந்த நலத்திட்டத்தையும் செயல் படுத்தவிடாமல் கவர்னர் தொல்லை கொடுத்து வருகிறார். வருகிற 21-ந் தேதி இதற்கு கோர்ட்டு ஒரு முடிவு கட்டும்.
ரூ.10 கோடி வரையிலான கோப்புகளுக்கு நானும், அமைச்சர்களுமே முடிவு செய்யலாம். ஆனால், ஒரு ரூபாய் செலவு செய்தாலும் தனக்கு தெரிய வேண்டும் என கவர்னர் கோப்புகளை கேட்டு பெற்று வருகிறார்.
புதுவை அதிகாரிகளை நினைத்து பரிதாபப்பட வேண்டியுள்ளது. அவர்களை நாங்கள் விதிப்படி நடக்க சொல்கிறோம்.
ஆனால், கவர்னர் அதிகாரிகளை அழைத்து வசைபாடுவது, மிரட்டுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறார்.
கவர்னருக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது? நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் 91-வது பாராவில் முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு கட்டுப்பட்டுதான் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆனால், சில அதிகாரிகள் கோப்பை கவர்னருக்கு அனுப்பி வைக்கின்றனர். இதுபோன்று செயல்படும் அதிகாரிகளை கணக்கெடுத்து வைத்துள்ளோம். அவர்களுக்கும் வேட்டு வைப்போம்.
புதுவையில் குப்பை அள்ள தனியார் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.2 கோடி அளிக்க வேண்டும். இந்த நிறுவனத்திற்கு நாம் அனுமதி தரவில்லை.
கடந்த ஆட்சியில் ரங்கசாமி அனுமதி கொடுத்தார். இந்த நிறுவனம் விதிப்படி செயல்படுவது கிடையாது. மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து பெறுவது கிடையாது. இந்த நிறுவனத்திற்கு பணம் கொடுக்க கவர்னர் வக்காலத்து வாங்குகிறார்.
கவர்னர் ஒரு தர்பார் நடத்தி வருகிறார். இதற்கெல்லாம் முடிவு நெருங்கி வருகிறது. சிங்கப்பூர் சென்று வந்த பிறகு முதலீட்டாளர்கள் எங்களை அணுகி வருகின்றனர். நாங்கள் சிங்கப்பூர் செல்ல வெளியுறவுத்துறை அனுமதி பெற்றுத்தான் சென்றோம். 3-ந் தேதி அனுமதி கிடைத்தது. 7-ந் தேதி சென்றோம்.
கவர்னரிடம் அனுமதி பெற வேண்டும் என எந்த விதியிலும் இல்லை. தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் கவர்னர் தலையிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
புதுவை மக்களை அவர் துன்புறுத்துகிறார். சர்வாதிகாரி ஹிட்லரின் தங்கையாக கிரண்பேடி செயல்படுகிறார். நாள் தோறும் கோப்புகளை பார்க்கும்போது சூடு ஏறுகிறது.
மக்களுக்கு அளிக்க வேண்டியதை தடுப்பதற்கு கவர்னர் யார்? மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு பதில்கூற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
ஆனால் கிரண்பேடிக்கு நாங்கள் பதில்கூற மாட்டோம். நாங்கள் யாருக்கும் அடிமை கிடையாது. மக்கள் ஆதரவை பெற்றுத்தான் ஆட்சிக்கு வந்துள்ளோம். அவரவர் அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.
நாடு முழுவதும் எத்தனையோ கவர்னர்கள், உள்ளனர். எந்த கவர்னராவது அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறார்களா? இதற்கெல்லாம் மத்தியில் உள்ள பா.ஜனதா ஆட்சியும், மோடியும்தான் காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.