
அம்மா மக்கள் முன்னேற்ற கழக குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் பச்சைமால். முன்னாள் அமைச்சரான இவர் கட்சியில் அமைப்பு செயலாளர் பதவியும் வகித்து வந்தார்.
இவர் அ.ம.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். நாளை (5-ந் தேதி) அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைய உள்ளார். இதுதொடர்பாக பச்சைமாலை, அ.ம.மு.க. மூத்த நிர்வாகிகள் தொடர்பு கொண்டு சமாதானம் செய்தனர். ஆனால் பச்சைமால் அதனை ஏற்க மறுத்து அ.தி.மு.க.வில் இணையப் போவதை உறுதி செய்தார். அவருடன் நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனும் அ.தி.மு.க.வில் இணைய உள்ளார்.

பச்சைமால் நீக்கத்தை தொடர்ந்து குமரி கிழக்கு மாவட்ட பொறுப்புகளை கவனிக்கும் பொருட்டு தேர்தல் பிரிவு செயலாளர் மாணிக்கராஜா தலைமையில் 5 பேர் கொண்ட பொறுப்புக்குழுவையும் தினகரன் நியமித்துள்ளார். பேரவை துணை செயலாளர் லட்சுமணன், மாவட்ட அவைத்தலைவர் ஹிமாம் பாதுஷா, துணை செயலாளர் செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நவமணி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் செந்தில்முருகன் ஆகியோர் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.