
ஊத்துக்கோட்டை:
பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னையில் குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்த நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளவு 11.05 டி.எம்.சி.
இதில் பூண்டி ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி செப்டம்பர் மாதம் 28-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் கடந்த 6-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் 11-ந் தேதி புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளை ஒட்டி உள்ள ஆந்திர கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது.

இதனால் சித்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அணை முழுவதுமாக நிரம்பியது. இங்கிருந்து கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று இரவு பூண்டி ஏரிக்கு வந்தடைந்து. இதனால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணா நீர் 543 கனஅடியும், மழை மற்றும் கிருஷ்ணாபுரம் அணை நீர் 627 கன அடி என மொத்தம் 1270 கனஅடி தண்ணீர் பூண்டி ஏரிக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.
இதே அளவு தண்ணீர் தொடர்ந்து வந்தால் இன்னும் சில நாட்களில் பூண்டி ஏரி முழு கொள்ளவை எட்டிவிடும்.
பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை ஷட்டர்கள் வழியாக திறந்து விடுவது வழக்கம். இப்படி திறந்து விடப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கும்.
எனவே தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்க்க பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு 430 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு 22 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ண்ர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 29. 75 அடியாக இருந்தது. 1682 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.