
கடந்த சனி, ஞாயிறு விடுமுறை நாட்களோடு ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையும் தொடர்ந்து வந்ததால் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. வழக்கமான தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
சென்னையில் 5 இடங்களில் இருந்து அனைத்து முக்கிய பகுதிகளுக்கும் கடந்த 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 3 நாட்கள் கூடுதலாக பஸ்கள் விடப்பட்டன. போக்குவரத்து கழக அதிகாரிகள் இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக பஸ் நிலையங்களில் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

3 நாட்களில் மொத்தம் 8,440 பஸ்கள் சென்னையில் இருந்து விடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 4 லட்சத்து 79 ஆயிரத்து 250 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதிகாலை வரையில் சுமார் 5 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளியில் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக பல்வேறு நகரங்களில் இருந்து இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நெல்லை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, சேலம், கும்பகோணம், கோவை, மதுரை, திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆயுத பூஜை விடுமுறைக்கு பிறகு நாளை பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி அரசு அலுவலகங்கள் செயல்பட இருப்பதால் பஸ், ரெயில்களில் இன்று கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு வரும் பஸ்கள் நெரிசலில் சிக்காமல் குறித்த நேரத்திற்குள் வர போலீசாரும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக வண்டலூர், பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து பெங்களூருக்கு இன்று 10 சிறப்பு பஸ்களும் நாளை 5 பஸ்களும் இயக்கப்படுகின்றன. சேலத்தில் இருந்து 80 பஸ்களும் திருவண்ணாமலையில் இருந்து 75, வேலூரில் இருந்து 40, கரூரில் இருந்து 5, திருச்சியில் இருந்து 7, நெல்லையில் இருந்து 15 என மொத்தம் 237 சிறப்பு பஸ்கள் இன்றும், நாளையும் இயக்கப்படுகின்றன.
மதுரையில் இருந்து கோவைக்கு 115 சிறப்பு பஸ்கள், திருச்சியில் இருந்து 120, சேலத்தில் இருந்து 190, தேனியில் இருந்து 25, நெல்லையில் இருந்து 40 என மொத்தம் 490 சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.
திருப்பூருக்கும் நெல்லை, மதுரை, திருச்சி, சேலம், தேனியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.