
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கீழடி பகுதியில் அகழாய்வுப் பணிகள் நவீன தொழில்நுட்பத்துடன் நடைபெறவும், அகழாய்வு முடிவுகளை தொகுத்து தமிழர் வரலாற்றை வெளியிடவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகள் தமிழரின் தொன்மையை, பழங்கால வரலாற்றை தெரிந்து கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது. கீழடி பகுதியில் 5 கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்த நிலையில் கிடைக்கப் பெற்ற தொல்பொருள்கள் மூலமும், இதனைத் தொடர்ந்து நடை பெறவுள்ள 6 ஆம் கட்ட அகழாய்வுப்பணிகளில் கிடைக்கப்பெறும் தொல் பொருள்கள் மூலமும் தொகுத்து ஆய்வறிக்கை கிடைக்கும்.
இதற்கான முழு முயற்சியில் இந்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சி துறை மற்றும் பல்வேறு பல்கலைக் கழகங்களும் இணைந்து பணியாற்ற திட்டமிடப்பட்டிருப்பது இப்பணிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும்.
குறிப்பாக தமிழகத்தில் கீழடியைத் தொடர்ந்து பல்வேறு பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ள இருப்பதும், கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்க இருப்பதும் தமிழக தொல்லியல் துறையின் பயன் தரக்கூடிய முயற்சியாகும். மேலும் தமிழக தொல்லியல் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு மாநிலத்தில் எங்கெல்லாம் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளலாம் என்பதை முடிவு செய்து பணிகளை தொடர வேண்டும்.
இப்பணிகளில் ஏற்கனவே கிடைக்கப்பெற்ற தொல் பொருள்கள் பாதுகாக்கப்பட்டு, தயாரிக்கப்படும் ஆய்வறிக்கையின்படி தமிழரின் பழங்கால, பண்டையகால வரலாற்றை தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் ஏன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தெரிந்துகொள்ள முடியும்.
அது மட்டுமல்ல அகழாய்வினால் தமிழரின் புகழையும், பெருமையையும், இந்தியாவின் வரலாற்றையும் உலகமே தெரிந்துகொண்டு வியக்கும் காலம் விரைவில் வரும்.
எனவே தமிழக தொல்லியல் துறையின் தொடர் முயற்சியால் அகழாய்வுப் பணிகள் தொடரவும், தொல் பொருட்கள் பாதுகாக்கப்படவும், தமிழரின் தனித்தன்மையான, தொன்மையான, வரலாற்றுச் சிறப்பானது முதன்மையான, முக்கியமானதாக விளங்கவும் தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.