
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் பல்வேறு கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. இதில் பழங்கால நகர நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது. வட்டப்பானை, தண்ணீர் தொட்டி, இரட்டைச்சுவர், பானை மூடிகள், வில் அம்பு பொறித்த பானை ஓடுகள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த பொருட்கள் சுமார் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தையவை என தெரிய வந்துள்ளது. கீழடி அகழாய்வில் கிடைக்கும் பொருட்கள் குறித்து தகவல் வெளியான நாள் முதல் தினமும் ஏராளமானோர் வந்து பார்த்துச் செல்கின்றனர்.
தற்போது அங்கு 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஜூன் மாதம் 13-ந்தேதி தொடங்கிய இந்த பணி வருகிற 30-ந்தேதியுடன் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தினமும் 100-க்கும் மேற்பட்டோர் அகழாய்வு பணியை பார்க்க வருவதால் அங்கு தொல்பொருட்கள் கண்காட்சி நடத்த தொல்லியல் துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் கீழடியில் அகழாய்வு பணிகளை மாவட்ட கலெக்டர்கள் ஜெயகாந்தன் (சிவகங்கை). பிரசாந்த் வடநேரே (கன்னியாகுமரி), பல்லவி பல்தேவ் (தேனி). சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன் ஆகியோர் பார்வையிட்டனர்.
உறை கிணறு, தண்ணீர் தொட்டி, சுடுமண் குழாய் போன்றவற்றை பார்வையிட்ட அவர்கள், அதன் கட்டுமானம் குறித்தும் கேட்டறிந்தனர்.
5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் இன்று கீழடி வந்து ஆய்வு செய்தார். அமைச்சர் பாஸ்கரனும் இந்த ஆய்வில் பங்கேற்றார்.
அவர்கள் தொல்லியல் துறையினருடன் ஆய்வு பணி குறித்து ஆலோசித்தனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தொன்மை வாய்ந்த பொருட்களையும் பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் இந்தப் பணி மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சியை சிலர் அரசியலாக்கப் பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
6-ம் கட்ட அகழாய்வு பணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் பனையூரில் நடைபெற உள்ளது.