
பிரதமர் நரேந்திர மோடியின் 69-வது பிறந்தநாளையொட்டி பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் நடந்தது.
இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு வேட்டி மற்றும் சேலைகளை வழங்கினார். இதேபோல மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளையும் அவர் வழங்கினார்.
இதையடுத்து பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையை மாற்றி, அதனை இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக்கி பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு சேர்த்திருக்கிறார். தேசப்பிதா காந்தியடிகளின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அக்டோபர் 2-ந்தேதி முதல் நாடு முழுவதிலும் இருக்கக்கூடிய மக்களை சந்தித்து அவருடைய கொள்கைகளை விவரிக்கும் வகையில் பாத யாத்திரைகள் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் 15 நாட்கள் தினசரி 10 கிலோ மீட்டர் தூரம் இந்த பாதயாத்திரை நடைபெறும். உள்துறை மந்திரி அமித் ஷா, இந்தி நாள் பற்றிய நிகழ்ச்சியில் பேசியதை தவறாக சித்தரித்து அதில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறது. அமித் ஷா அது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதனை ஏற்று அறிவித்த போராட்டத்தை தி.மு.க. கைவிட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க ஒன்று.

நரேந்திரமோடி அரசு எந்த ஒரு விஷயத்தையும் திணிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது. அரசியல் கட்சிகள் சில தவறான கருத்துகளை புரிந்து கொண்டு, பின்பு திருத்திக்கொள்கிறார்கள். அப்படி இருக்கும்போது, நடிகர்கள் கூறும் கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. அவர்களும் நாட்டின் குடிமக்களே.
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் எத்தனை பேனர்கள் வைக்கப்பட்டது? உரிமம் இல்லாமல் வைத்தவர்கள் மீது எத்தனை நடவடிக்கை எடுக்கப்பட்டது? திரைப்படத்துறையில் எத்தனை பேனர்கள் வைக்கப்பட்டது? முன்பு நடந்த நிகழ்வுகளை பேசி ஒருவரையொருவர் மூக்கறுத்து கொள்ளவேண்டாம்.
விலைமதிப்பில்லா உயிரை பறிகொடுத்துவிட்டோம். இனிவரக்கூடிய காலங்களில் திருந்துவோம். எந்த கட்சியாக இருந்தாலும் கட்-அவுட், பேனர் வைக்க அனுமதிக்கக்கூடாது. கோவில், மசூதி மற்றும் கிறிஸ்தவ தேவாலய நிகழ்ச்சிகளிலும் பேனர் வைக்கக்கூடாது. நோட்டீஸ்கள் கூட ஒட்டக்கூடாது. இது நடக்க வேண்டும். எல்லோருக்கும் பொருந்தும்.
தமிழகத்தில் மத்திய, மாநில அரசு துறைகளிலும், தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகள் உள்பட அனைத்திலும் தமிழர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். தி.மு.க. இதில் கருத்து சொல்ல என்ன இருக்கிறது? அவர்கள் தான் இந்த சீரழிவை கொண்டு வந்தார்கள்.
தமிழன் என்ற முறையில் நாடு முழுவதும் தமிழ் பரவ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு ஏற்றபடி, திட்டமும், வேலையும் நாம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.