
அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு கடந்த 8 ஆண்டுகளில் (2011-12 முதல் 2018-2019 வரை) பங்கு மூலதன உதவி, கடன், வழிவகை முன்பணம், உதவித்தொகை, மாணவர் கட்டணச்சலுகையை ஈடுசெய்தல் ஆகிய வகைகளில் 15,040 கோடியே 9 லட்சம் ரூபாயை அரசு வழங்கியுள்ளது.குறிப்பாக, ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சேமநலநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், ஓய்வூதிய ஒப்படைப்பு ஆகிய சட்டரீதியான பணப்பலன்கள் மற்றும் தாமதமாக வழங்கப்பட்ட ஓய்வூதிய நிலுவைத் தொகைக்கான வட்டி முதலியன வழங்கும் பொருட்டு, 2017-2018-ம் நிதியாண்டில் 2147 கோடியே 39 லட்சம் ரூபாயும், 2018-2019-ம் நிதியாண்டில் 487 கோடியே 56 லட்சம் ரூபாயும் அரசு வழங்கியுள்ளது.
மேற்படி, தமிழ்நாடு அரசின் நிதியுதவி மூலம் மார்ச் 2018 வரை ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு சட்ட ரீதியான பணப்பயன்கள் வழங்கப்பட்டுள்ளன.தற்போது, ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சட்டரீதியான பணப்பலன்களான சேமநல நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், ஓய்வூதிய ஒப்படைப்பு, பங்களிப்பு ஓய்வூதியம் ஆகியவற்றினை வழங்கும் பொருட்டு அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் 1,093 கோடி ரூபாயை வழங்கிட அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.