
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 62-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அகம்பாவத்தில் பேசுகிறார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி ஜெயலலிதா வழியில் தி.மு.க. எங்களுக்கு எதிரிக்கட்சி . இதில் போய் என்னை இணைவார் என்று சொல்பவர்கள் தான், பாதுகாப்பு கருதி விரைவில் தி.மு.க.வில் இணைவார்கள்.
கடந்த இடைத்தேர்தலில் எங்களுக்கு பின்னடைவு தான். பரிசுப் பெட்டகத்தில் விழுந்த வாக்குகள் எங்கு சென்றது? என்று தெரியவில்லை.

தி.மு.க. எங்களுக்கு எதிரி. எடப்பாடி அன் கோ எங்களுக்கு துரோகிகள். முதல்வர் வெளிநாடு பயணம் குறித்து வெள்ளை மனம் இருந்தால் வெள்ளை அறிக்கை வெளியிடலாம். முதல்வர் இஸ்ரேல் சென்று வந்தாவது தமிழகத்தில் நீர் மேலாண்மையை நிலை நாட்டட்டும்.
துரித உணவு மாதிரி உடனடியாக பதவி சுகம் தேடி வந்தவர்கள் அ.ம.மு.க.வை விட்டு விலகிச் சென்று இருக்கிறார்கள். 95 சதவீதம் நிர்வாகிகள் எங்களோடுதான் இருக்கிறார்கள். ஒருவர் வெளியே சென்றால், நூறு பேர் உள்ளே வருவார்கள்.
முதலமைச்சர் வெளிநாடு பயணம் எட்டாவது உலக அதிசயம் சாதனை என சொன்ன அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஒன்பதாவது உலக அதிசயம்.
இவ்வாறு அவர் கூறினார்.