
தெலுங்கானா மாநில கவர்னராக நேற்று முன்தினம் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி ஏற்றார்.
பிறகு அவர் தெலுங்கானா மாநில கவர்னர் மாளிகை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உங்கள் அனைவரிடமும் நான் நல்ல நட்புடன் இருக்க விரும்புகிறேன். அதற்கு ஏற்ப செயல்படுவேன். அதே சமயத்தில் நீங்கள் உங்களது கடமைகளை சரிவர செய்ய வேண்டும்.
நான் தினமும் யோகா செய்து வருகிறேன். நீங்களும் தினமும் யோகா செய்ய வேண்டும். உடல் நலத்தை பேணிகாக்க வேண்டும்.
நான் இங்கு வந்து கவர்னராக பதவி ஏற்றுக் கொள்வதற்கு முன்பே தெலுங்கானா மாநிலத்தின் சமூக, பொருளாதார பிரச்சனைகள் பற்றி தெரிந்து வைத்துள்ளேன். எனவே அதன் அடிப்படையில் எனது கவர்னர் பதவி பணிகள் இருக்கும்.
தெலுங்கு மொழியை இன்னும் 15 நாட்களுக்குள் கற்றுக்கொள்வேன். அதன் பிறகு என்னை சந்திப்பவர்களிடம் தெலுங்கில் சரளமாகப் பேசுவேன்.
இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.