
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5-ம் தேதி நடந்தது. அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராணிப்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டது. அங்கு துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் 76 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணும் பணியில் 375க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு 8.30 மணியளவில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 11 மணியளவில் முன்னணி நிலவரம் தெரிந்துவிடும்.