
இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
இந்த ஆண்டு தொடங்கப்படும் கரூர் அரசு மருத்துவ கல்லூரியை சேர்த்து 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன.
மருத்துவ கல்லூரிகளுக்கு அதன் கட்டமைப்பு வசதியை பொறுத்து எம்.பி.பி.எஸ். இடங்கள் உயர்த்தி வழங்கப்படுகின்றன.
புதிதாக தொடங்கப்படும்போது 100 மாணவர்களை சேர்ப்பதற்கு தான் இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளிக்கும்.
பின்னர் படிப்படியாக அதன் வசதிகள், பேராசிரியர்கள், ஆய்வக வசதிகளை ஆய்வு செய்து இடங்கள் அதிகரிக்கப்படும். அந்த வகையில் தற்போது சென்னை மருத்துவ கல்லூரி (எம்.எம்.சி.), ஸ்டான்லி, மதுரை, திருநெல்வேலி மருத்துவ கல்லூரிகளில் அதிகபட்ச இடங்கள் தலா 250 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளன.
கோவை, கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவை அடுத்த ஆண்டு 2020 மாணவர் சேர்க்கைக்கு ஆய்வு செய்து அனுமதி அளிக்கப்படுகிறது. மற்ற 3 மருத்துவ கல்லூரிகள் இன்னும் 5 ஆண்டுகள் நிறைவு செய்யவில்லை. 9 அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 225 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை 13 அரசு மருத்துவ கல்லூரிகளில் 25 சதவீத இடங்களை அதிகரிக்க தகுதியாக உள்ளன. இதன் மூலம் 650 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழகத்திற்கு 1000 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 600 இடங்கள் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படும். மீதமுள்ள 400 இடங்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதியினருக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

உயர் ஜாதி நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற முன் வந்தால் கூடுதலாக 375 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும் என்று அரசு கணக்கிட்டுள்ளது.