
சண்டிகர்:
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது. இதன் காரணமாக ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியை கடந்த 3-ந்தேதி அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் யார்? என்பது குறித்து காரியகமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சுசீல்குமார் ஷிண்டே, ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக்கெலாட் மற்றும் இளம் தலைவர்களான சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்யா சிந்தியா ஆகியோர் தலைவர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோல மனீஸ்திவாரி, சசிதரூர் ஆகியோர் பெயரும் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ராகுல் காந்தி போன்ற இளைஞர் தான் காங்கிரசுக்கு அடுத்த தலைவராக வரவேண்டும் என்று பஞ்சாப் முதல்- மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான அமரீந்தர் சிங் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகியது துரதிருஷ்ட வசமானது. அவருக்கு பதிலாக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுபவர் ராகுல் காந்தியை போன்ற இளைஞராக இருக்க வேன்டும். இதை காங்கிரஸ் காரியகமிட்டி கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலகிலேயே அதிக இளம் தலைமுறையினரை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. அதனால் நாட்டில் நிலவும் பிரச்சினைகளை அவர்களால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதம்பேர் 35 வயதுக்கும் குறைவானவர்கள்.
ராகுல் காந்தியின் இடத்தை இளம் தலைவர் ஒருவரால் தான் நிரப்பி புத்துயிர் அளிக்க முடியும். இதனால் கட்சியின் மூத்த தலைவர்கள் இளம் தலைமுறையினருக்கு பதவி தருவதற்கு வழி ஏற்படுத்தி கொடுக்க வேன்டும்.
இளம் தலைவர் ஒருவரால் தான் அடிமட்டத்தின் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு இளைஞர் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.