
பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக உறுப்பினர்கள் பேசினர்.
குறிப்பாக, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வட மாநிலங்களில் குடிநீருக்காக மக்கள் திண்டாடி வரும் அவலநிலை தொடர்பாக பாஜக எம்.பி, சத்யநாராயணன் ஜாட்டியா வேதனை தெரிவித்தார்.
குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண விரைவான, தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இவற்றை எல்லாம் கவனித்த மாநிலங்களவை சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கய்யா நாயுடு, ‘நாடு முழுவதும் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, இதுபற்றி தனியாக விவாதிக்கப்பட வேண்டும்.
இதற்காக அனுமதி கோரி உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்தால் தனி விவாதம் நடத்துவதற்கு அனுமதியளிக்க நான் தயாராக இருக்கிறேன்’ என உறுதியளித்தார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாராளுமன்ற மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு இன்று காலை நோட்டீஸ் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.