
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு இந்த பங்களாவுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் காவலாளியை கொலை செய்து விட்டு கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சயான், மனோஜ் உள்பட பலரை கைது செய்தனர்.
தற்போது சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர். இவர்களுக்கு அடுத்த மாதம் 2-ந்தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இவர்கள் 2 பேரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதாரமற்ற புகார்களை கூறி வருவதால் இவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரி ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வக்கீல் பால நந்தகுமார் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்நிலையில் ஜனவரி 29-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்ற உதகை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சயான், மனோஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். அப்போது நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் வரும் 28-ந்தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர். #KodanadEsate