
இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அக்டோபர் 26-ம் தேதி அதிபர் சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். அதிலிருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை. எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி அடைந்தார்.
இதற்கிடையே அதிபரின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட இடைக்கால தடை விதித்தது. பின்னர் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், இலங்கை பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அறிவித்தது. மேலும், பாராளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் தெரிவித்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ராஜபக்சே பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே நாளை மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். #RajapaksaResigns