
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்குடி மேலத் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 47). இவர் பெருக வாழ்ந்தான் கிராமத்தில் நூலகராக பணியாற்றி வந்தார்.
இவர் தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை அழைத்து கொண்டு நீட் தேர்வுக்கு எழுத கடந்த 4-ந் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையத்துக்கு சென்றார்.
அங்கு விடுதியில் தங்கியிருந்த கிருஷ்ணசாமி மாரடைப்பால் இறந்தார். நீட் தேர்வால் பலியான கிருஷ்ணசாமி பலியான சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். கிருஷ்ணசாமி குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரண உதவியாக முதல்-அமைச்சசர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
எர்ணாகுளத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி விளக்குடி கிராமத்துக்கு நேற்று கிருஷ்ணசாமி உடல் கொண்டு வரப்பட்டது. கிருஷ்ணசாமி உடலுக்கு கனிமொழி எம்.பி., ஜி.கே.வாசன், ஜி.ராமகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பி.ஆர்.பாண்டியன் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கிருஷ்ணசாமியின் மனைவி பாரதி மகாதேவி, மகன் கஸ்தூரி மகாலிங்கம், மகள் ஐஸ்வர்யா மகாதேவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
இன்று காலையில் கிருஷ்ணசாமி உடலுக்கு அனைத்து கட்சி நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு , கிருஷ்ணசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து, இன்று காலை 9.45 மணியளவில் கிருஷ்ணசாமி இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் கிராம மக்கள் சோகத்துடன் ஊர்வலத்தில் சென்றனர். பின்னர் விளக்குடியில் உள்ள மயானத்தில் கிருஷ்ணசாமி உடல் தகனம் செய்யப்பட்டது.
#NEET2018 #Krishnasamy #KrishnasamyDeath