
ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, பணப் பட்டுவாடா புகார் காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இன்று மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இதில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன், பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட 59 பேர் களத்தில் உள்ளனர். அனைத்து வாக்குசாவடி மையங்களும் பதற்றமானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் போலீசார், துணை ராணுவ போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பொதுமக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வந்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆர்.கே.நகர் தொகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒரு சில வாக்குச்சாவடிகளில் பழுதான விவிபேட்- இயந்திரங்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாலை 5 மணிக்குள் வரிசையில் நிற்பவர்களுக்கு, எவ்வளவு நேரமானாலும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்.
மேலும், ஆர்.கே.நகர் தொகுதியின் சில இடங்களில் காலையில் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, 20 ரூபாயை டோக்கனாக தந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நேற்றிரவு சில வழக்குகள் பதியப்பட்டுள்ளன.